Published : 30 Mar 2018 11:12 AM
Last Updated : 30 Mar 2018 11:12 AM

மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம்: அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் கடந்த பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய நீரில் 14.75 டிஎம்சி நீரை குறைத்த உச்ச நீதிமன்றம், அந்த நீரை கர்நாடகத்துக்கு கூடுதலாக ஒதுக்கியது. மேலும், தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஆறுவாரம் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை விவாகரத்தில் மத்திய அரசின் மெத்தன போக்கிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நம்பினோம். இதுவரை யாரும் தராத அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்தோம்.

 நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து முடக்கி வந்தனர். முதல்வர் அமைச்சர்களை கூட்டி  உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.  மாநில நலனுக்காக தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தது. இணக்கமாக இருப்பதால் மாநில அரசின் நலனை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை.

 காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம். மேல் முறையீடா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கா என்று அரசு கொள்கை முடிவுச் செய்யும். இதுகுறித்து நான் கூறமுடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x