Published : 08 Mar 2018 10:22 PM
Last Updated : 08 Mar 2018 10:22 PM

முதியோர், விதவைகள் உதவித்தொகையில் கையாடல்: சென்னையில் வங்கி ஏஜென்சி ஊழியர் கைது

 முதியோர், விதவைகளுக்காக அரசு தரும் ஏழை முதியோர், விதவை உதவித்தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டு 6 மாதங்களில் பல லட்சம் சுருட்டிய தனியார் வங்கி ஏஜென்சி ஊழியரை தாசில்தாரே மடக்கிப் பிடித்தார்.

ஏழை முதியோர், விதவைகளுக்காக மாதம் தோறும் அரசு ரூ. 1000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை முன்பெல்லாம் தபால் மூலம் மணியார்டரில் வரும். அப்போது மணியார்டர் தரும் தபால் ஊழியருக்கு ரூ.20 முதல் 100 வரை பணம் கொடுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து முதியோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வங்கி ஏஜென்சிகள் மூலம் பணம் வழங்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டது. பாம்பு வாயில் தப்பி முதலை வாயில் விழுந்த கதையாக தபால்காரனாவது 100 ரூபாய் பிடுங்கினான், இந்த தனியார் வங்கிக்காரர்கள் மொத்த பணத்தையே இல்லாமல் செய்துவிட்டார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

பல மாதங்கள் பணம் வரவில்லை என்றே பெண்கள் திருப்பி அனுப்பப்படும் கதை தமிழகம் முழுவதும் வாடிக்கையாக உள்ளது. இதில் கண்காணிப்பு எதுவும் இல்லாததால் யார் பணத்தை கையாடல் செய்கிறார்கள் என்றே தெரியாது. இந்த நிலையில் ராயபுரம் பகுதியில் தொடர்ச்சியாக அரசு உதவிப்பணம் வரவில்லை என்று பாதிக்கப்பட்ட முதியோர்கள் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.

இதுபற்றி தாசில்தார் தனியாக கண்காணித்து வந்தபோது எஸ்பிஐ தனியார் ஏஜென்சி ஊழியர் சூளையை சேர்ந்த நவீன் என்பவர் சிக்கினார். இவர் உதவிப்பணம் கேட்டு வரும் பெண்களிடம் கைரேகை பெற்றுக்கொண்டு பணம் இன்னும் வரவில்லை என்று கூறுவதும், அவர்கள் பணத்தை கையாடல் செய்வதையும் தொழிலாக செய்து வந்துள்ளார்.

தங்கள் பணம் கையாடல் செய்யப்படுவதாக எழில் நகரைச் சேர்ந்த சுனிதா, தண்டையார்பேட்டையை சேர்ந்த சகுந்தலா போன்றோர் அளித்த புகாரின் பேரில் நவீன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தினசரி ரூ. 5000 வரை ஏழை மக்களின் உதவிப்பணத்தை கையாடல் செய்துள்ளதும், இதை கடந்த ஆறுமாதமாக செய்து வந்ததாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x