Published : 07 Mar 2018 01:03 PM
Last Updated : 07 Mar 2018 01:03 PM

பெரியார் சிலை விவகாரம்; முகநூல் நிர்வாகியை நீக்கிவிட்டேன்: ஹெச்.ராஜா பேட்டி

பெரியாரின் சிலை குறித்த கருத்தை முகநூல் பக்கத்தில் தான் பதியவில்லை என, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு தெரியாமல் அக்கருத்தை பதிவிட்ட அட்மினை நீக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து பெலோனியா கல்லூரி சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டது.

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில், "லெனின் யார்? அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவெரா ராமசாமி சிலை"என நேற்று பதிவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், ஹெச்.ராஜா கருத்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து அப்பதிவு நீக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "ஈ.வெ.ராமசாமி சிலை குறித்த கருத்தை என்னுடைய அனுமதியில்லாமல், அட்மின் தான் முகநூலில் பதிந்தார். அப்பதிவு எனக்கு ஏற்புடையதல்ல. கட்சி நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்த போதுதான் அக்கருத்து பதியப்பட்டிருந்தது.

டெல்லி வந்திறங்கியவுடன் தான் பதிவை பார்த்தேன். உடனேயே அப்பதிவை நீக்கியதோடு மட்டுமல்லாமல், அட்மினையும் நீக்கிவிட்டேன்.

கொள்கைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துச்சென்று அவர்களுடைய ஆதரவை ப்பெறுவதில் தான் முழு நம்பிக்கை உடையவன். சிலைகளை உடைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை.

இருப்பினும், எனக்கு தெரியாமல் அட்மின் பதிவிட்ட கருத்துதான் என்றாலும், என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததால், நான் எனது இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஹெச்.ராஜா கூறினார்.

அதேபோல், சர்ச்சைக்குரிய பதிவுக்கு தன்னுடைய முகநூல் பக்கத்திலும் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x