

இருகூர் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்த ஆளும் கட்சியினரை மார்க்சிஸ்ட் கட்சியினர் விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் இருகூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் கலைமதி போட்டியிடுகிறார். இருகூர் 14-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு சிலர் பணம் விநியோகம் செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில், மார்க்சிஸ்ட் கட்சியினர் அங்கு சென்றனர்.
அங்கு ஆளும் கட்சி ஒன்றிய நிர்வாகி ஒருவர் தலைமையில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் பிடிக்க முயன்றனர். அவர்களில் பலர் ஓட்டம் பிடிக்க ரங்கசாமி என்பவர் மட்டும் பிடிபட்டார். தகவல் அறிந்த காவல் துறையினர் ரங்கசாமியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து வேட்பாளர் கலைமதி தெரிவித்ததாவது:
இருகூர் பேரூராட்சி தலைவருக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளராக என்னை அறிவித்ததில் இருந்து ஆளும் கட்சியினர் பணம் தருகிறோம் என்று கெஞ்சினார்கள். பின்பு மிரட்டல் விடுத்தார்கள். எதுவும் பலிக்கவில்லை என்பதால் இப்போது வீடு, வீடாக வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பட்டபகலில் வெளிப்படை யாக நடைபெறும் இந்த தேர்தல் முறைகேட்டை மாநில தேர்தல் ஆணையம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை என்றார்.