Published : 12 Mar 2018 01:19 PM
Last Updated : 12 Mar 2018 01:19 PM

குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி மீட்புப் பணிகளை முடுக்கிவிடுக: ஸ்டாலின்

குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சைகளை தமிழக அரசு வழங்கி, மீட்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேனி மாவட்டம் குரங்கணி காட்டில் மலையேற்றத்திற்காக சென்ற 36 மாணவ மாணவிகளில் ஒன்பது பேர் காட்டுத் தீயில் சிக்கி இறந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும், சொல்லொனாத் துயரத்திற்கும் ஆளானேன். அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலையேறச் சென்ற மாணவ மாணவிகள் மரணம் அடைந்திருப்பதும், இன்னும் பலர் மீட்கப்படாமல் இருப்பதும் மிகுந்த மனக் கவலையளிக்கிறது. மத்திய- மாநில அரசுகளுடன் மலைவாழ் மக்களும் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் தீக்காயத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் விரைவில் முழுமையான குணம் பெற்று வீடு திரும்புவதற்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

குரங்கணி காட்டுப் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற காட்டுத் தீ விபத்து ஏற்படுகிறது என்று தெரிந்திருந்தும், மலையேற்றத்திற்கு சென்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உரிய வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தால் இது போன்ற விபத்துகளையும், உயிரிழப்புகளையும் நிச்சயமாகத் தவிர்த்திருக்க முடியும்.

ஆகவே, இனி வரும் காலங்களில் மலையேற்றத்திற்கு குரங்கணி காட்டுப் பகுதிக்கு செல்வோரின் பாதுகாப்பிற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்க வேண்டும். இன்னும் மீட்கப்பட வேண்டியவர்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x