Published : 03 Mar 2018 08:31 AM
Last Updated : 03 Mar 2018 08:31 AM

திருவண்ணாமலையில் பரிதாபம்: சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு- மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவர் கவலைக்கிடம்

திருவண்ணாமலையில் வீடு கட்ட தூண்களை எழுப்ப பள்ளம் தோண்டியபோது, அருகே உள்ள மடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன், திருவூடல் தெருவில் வீடு கட்டி வருகிறார். ஒப்பந்ததாரர் மணிகண்டன் என்பவர் கட்டுமானப் பணியை செய்து வருகிறார். கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி தூண்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, பக்கத்தில் உள்ள மடத்தின் சுவர் இடிந்து, தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கிய ரமேஷ்(22), அலமேலு (50), பூங்காவனம்(45), ஆபித் உசேன்( 22) ஆகியோரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ரமேஷ் மற்றும் அலமேலு ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. கவலைக்கிடமாக உள்ள மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு தொழிலாளியான லட்சுமணன்(35) தீவிர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களின் தேடுதலில், இடிபாடுகளில் வேறு எவரும் சிக்கயிருக்கவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து கட்டிடக் கழிவுகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலட்சியத்தால் விபரீதம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘கட்டிடம் கட்டும் பணிக்காக இடிக்கப்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது. அதேபோல், பக்கத்தில் உள்ள மடத்தின் சுவரும் மிகப் பழமையானது. அந்த சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இடிக்கும் பணியை தொடங்கியதே 3 தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமாகிவிட்டது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x