Published : 14 Mar 2018 09:06 AM
Last Updated : 14 Mar 2018 09:06 AM

திருக்கோவிலூர் சம்பவம்: பாதிக்கப்பட்ட தாய், மகள் உடல்நிலையில் முன்னேற்றம்- சிறுமி வாக்குமூலம் அளித்ததாக எஸ்பி தகவல்

திருக்கோயிலூர் அருகே சிறுவன் ஒருவன் கொலையான சம்பவத்தின்போது, மர்ம நபரின் தாக்குதலால் கடுமையாக காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கியதில் சிறுவன் சமயன் உயிரிழந்தான். இந்த தாக்குதலில் சிறுவனின் தாய், அவரது மகள் பலத்த காயமடைந்தனர். தாய், மகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இச்சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவத்தின்போது தாய், மகள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜிப்மரில் தனித்தனியாக சிகிச்சை பெற்று வந்த இருவரின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சிகிச்சை பெறும் தாய், மகள் இருவரும் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். எனினும் சிறுமியால் இன்னும் பேச இயலாத சூழலே உள்ளது” என்று குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஜெயகுமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாக்குதலுக்கு உள்ளான சிறுமிக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பேசும் நிலையில் உள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று அருகாமை கிராமமான புலிக்கல் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு பின்னர் இரவு உணவுக்குப் பின் தூங்கிவிட்டதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்றும் கூறியதாக எஸ்பி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x