Published : 26 Mar 2018 10:15 PM
Last Updated : 26 Mar 2018 10:15 PM

ஆர்டர்லி முறையை ஒழித்துவிட்டதாக பொய் சொல்வதா?- பட்டியல் என்னிடம் இருக்கிறது; காவல்துறையை எச்சரித்த நீதிபதி

தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அதன்படி யாரும் பணியமர்த்தபடுவதில்லை என தமிழக காவல்துறை உதவி ஏஐஜி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள நீதிபதி மறுத்து மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துவர்கள் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த வாரம் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்த நீதிபதி “எத்தனை பேர் தற்போது உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? என்பதனை அரசு அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்.”

ஆர்டர்லி முறை ஒழிக்கபட்டு விட்டதாக பிறப்பிக்கபட்ட அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? காவலர்களின் குறைகளைக் களைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டார்.

இதையடுத்து டிஜிபி டிகே.ராஜேந்திரன் நீதிபதி எழுப்பிய விவரங்களை சேகரித்து அனுப்பும் படி அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். மறுபுறம் காவலர்களே தன்னெழுச்சியாக ஆர்டர்லிகள் குறித்த விவரங்களை வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை உதவி ஏஐஜி மகேஸ்வரன் சார்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் ஆர்டர்லி என்ற முறையே இல்லை. அது முற்றிலுமாக ஒழிக்கபட்டு விட்டது. ஏற்கெனவே இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உறுதியுடன் பின்பற்றபட்டு வருகின்றோம்.

இருப்பினும் ஆன் - டூட்டி அடிப்படையில் உயர் அதிகாரிகள் வீடுகளில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்த படுவதாகவும் அவர்கள் பணியை தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுத்துவது இல்லை. ஆர்டர்லியாக யாரும் பணியமர்த்தப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் இருந்து 8158 பேர் ராஜினாமா செய்துள்ளனர். முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக 520 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறையில் 296 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாலை விபத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இறப்பு 3032 காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

மனுவைப் படித்து பார்த்த நீதிபதி இதைத்தான் நீங்கள் பதில் மனுவாக தாக்கல் செய்வீர்கள் என எனக்கு தெரியும் என வழக்கு விசாரணைக்கு ஆஜரான தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், தான் தற்போது தான் இந்த வழக்கில் ஆஜராக வருவதாகவும் முழுமையான விவரங்கள் பெற்று பதில் மனுவாக தாக்கல் செய்வதாகவும் அதற்கு மேலும் 4 வாரம் கூடுதல் கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதி கிருபாகரன் தற்போது ஆர்டர்லி முறை இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பான விபரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், கடந்த 1990 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் அதிகாரி வீடுகளில் இன்று வரை காவல்துறை ஆர்டர்லி முறையில் பணியமர்த்தபடுவதாகவும் இதே போல் மதுரையில் குற்றப்பின்னணி கொண்ட ரவுடி பட்டியலில் உள்ள அரசியல் சார்ந்த நபர் ஒருவருக்கு ஆர்டர்லி முறையில் தற்போதும் பாதுகாப்பு என்ற பெயரில் ஆர்டர்லி முறையில் பணியமர்த்தபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் தற்போது ஒரு லட்சத்து 24 ஆயிரம் காவலர்கள் பணியில் இருப்பதாகவும் அதில் 10 முதல் 15 சதவீத காவலர்கள் ஆர்டர்லி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். தற்போது தாக்கல் செய்த பதில் முழுமையாக இல்லை தகவல்களும் முழுமையாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் குறுக்கிட்டு இது தொடர்பாக கீழ் மட்ட அதிகாரிகள் முடிவு எடுக்க முடியாது. உயர் அதிகாரிகள் மற்றும் அரசு தான் இதில் முடிவு எடுக்க முடியும். இப்பிரச்சினை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரி கவனத்திற்கு எடுத்து சென்று விரிவான பதில் அடுத்த விசாரணையில் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி கிருபாகரன் தற்போது தாக்கல் செய்த பதில் மனு முழுமையாக இல்லை. பல தகவல்கள் இல்லை எனவே இதனை தாக்கல் செய்த அதிகாரி அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும். இன்று தாக்கல் செய்த விபரங்களை விட பல விபரங்கள் என்னிடமே உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், ஆர்டர்லி முறை உள்ளிட்ட கடந்த விசாரணையின் போது நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க கூடுதலாக 4 வாரம் கால அவகாசம் தேவை என அரசு தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே கால அவகாசம் அளிக்கபடுகின்றது.

மேலும் தற்போது உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளில் எத்தனை அரசு வாகனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்த படுகின்றது. எந்தனை காவல்துறை ஓட்டுநர்கள் பணியில் உள்ளபோது உயர் அதிகாரிகளின் வீடுகளில், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும், அல்லது காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உறவினர்களுக்கு பணியமர்த்தபட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினர் அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லாத அரசியல் கட்சியினருக்கு தற்போது இது போன்ற பணி அமர்த்தபட்டுள்ளர்களா? ஏன் காவலர்களுக்கு பணி நேரம் நியமிக்க கூடாது. ஆர்டர்லி முறை தொடர்பாக 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உத்தரவு நடைமுறையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட விபரங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 23 ஆம் தேதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x