Published : 21 Mar 2018 01:00 PM
Last Updated : 21 Mar 2018 01:00 PM

அப்பல்லோவில் ஜெயலலிதாவை ஓபிஎஸ், தம்பிதுரை நேரில் பார்த்தனர் - சசிகலா

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜெயலலிதாவை அவர் மரணமடைந்த டிசம்பர் 5-ம் தேதி வரை யாரும் சந்திக்க அனுமதிக்கவில்லை என்ற புகார் உள்ள நிலையில், அவரை சந்திதவர்கள் யார் யார்? என விவரத்தை நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில், சசிகலாவின் வாக்குமூலத்தை அவரது சார்பில் வழக்கறிஞர் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரெல்லாம் சந்தித்தனர் என்ற விவரத்தையும் விரிவாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, 2016ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவைப் சந்தித்தார். கதவின் கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்தபோது, ஜெயலலிதா கையை அசைத்துக் காட்டினார். ஆளுநரும் மறுபடியும் கையை அசைத்தார். ஆளுநர் இதனை அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 22 முதல் 27ம் தேதி வரை பல்வேறு சமயங்களில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர்.

அக்காவை அவசர சிகிச்சைப் பிரிவில் (Multi-Disciplinary Critical Care Unit) இருந்து 2-வது தளத்துக்கு மாற்றும்போது ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகளான வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோர் அவரைச் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் அக்கா, "நான் நலமாக இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். மருத்துவர்கள் என்னை மேலும் சில நாள் இங்கு தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர். விரைவில் வீடு திரும்புவேன்" என கூறினார்.

2016 நவம்பர் 19-ல் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டபோது தொழில்துறை அமைச்சர் நிலோஃபர் கபீலும் அவருடன் சில அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் பார்த்தனர்.

இவ்வாறு அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் வழக்கறிஞர் என்.ராஜா செந்தூர் பாண்டியை, தி இந்து (ஆங்கிலம்) சார்பில் தொடர்புகொண்டு, இதுதொடர்பாக கேட்டோம்.

அதற்கு அவர் பதிலளிக்கையில் "விசாரணை கமிஷன் முன் ஆஜரான மூத்த அதிகாரிகள் பலரும் தாங்கள் ஜெயலலிதாவை செப்டபர் 22 முதல் டிசம்பர் 3 வரையிலான காலக்கட்டத்தில் எப்போதெல்லாம் பார்த்தோம் என்பதை விவரித்துள்ளனர். இன்னும் இதுபோன்று பலரும் அளிக்கும் சாட்சியங்களும், ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததையும், மற்றவர்களுடன் அவர் உரையாடியதையும் உறுதிபடுத்தும் பல சான்றுகளும், சாட்சிகளும் ஏற்கெனவே உறுதிபடுத்தியுள்ளன" என்றார்.

வீடியோ ஆதாரம்

ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஜெயலலிதாவின் அனுமதியுடன் எடுக்கப்பட்ட 4 வீடியோக்கள் விசாரணை கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக 2015, 2016-ல் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.மேலும், ஜெயலலிதா தனது உடல்நிலையை ஆவணப்படுத்த விரும்பியதால் அவருடன் சம்மதத்தின் பேரிலேயே வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்ட 4 வீடியோக்களும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

காவிரி நீர் பங்கீடு விவாகரம் தொடர்பாக 2016ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் 5 அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ், வழக்கறிஞர் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலர்கள் ஏ.ராமலிங்கம், கே.என்.வேங்கடராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x