Published : 15 Mar 2018 10:55 AM
Last Updated : 15 Mar 2018 10:55 AM

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் கட்சியின் பெயரும், கொடியும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தனது கட்சிப் பெயரை அவர் அறிவித்தார். 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார்.

 

மேலூர் பொதுக்கூட்டத்துக்கு கணிசமான அளவு தொண்டர்களையும் டிடிவி தினகரன் திரட்டியிருக்கிறார். காலை 7 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கிய நிலையில், சரியாக 10.30 மணிக்கு அவர் விழா மேடைக்குவந்து கட்சியின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

தேர்தலில் வெல்வோம்.. தினகரன் சூளுரை:

கட்சியின் பெயரை அறிவித்த டிடிவி தினகரன், புதிய பெயருடனும் கொடியுடனும் இனிவரும் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதேவேளையில், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம். அதுவரை குக்கர் சின்னத்தை பயன்படுத்துவோம் என்றார்.

 

 

உள்ளாட்சித் தேர்தலுக்காக..

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து அதில் அண்மையில் வெற்றியும் அடைந்தார் டிடிவி தினகரன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குக்கர் சின்னத்தை உள்ளாட்சித் தேர்தலுக்காக வென்ற கையோடு புதிய கட்சிப் பெயர் அறிவிப்பையும், கொடியையும் தினகரன் அறிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x