

மதுரை, வாடிப்பட்டி அருகே அரசுப் பேருந்து ஒன்று சாலையில் கிடந்த பைக் மீது மோதியதில் பேருந்து மற்றும் பைக் இரண்டும் தீப்பிடித்து முழுதும் எரிந்து போனது.
இந்த விபத்தில் ஓட்டுனரின் சரியான நேர எச்சரிக்கையினால் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் தூக்கத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் விபத்து நடந்த போது மணி அதிகாலை 2.10.
ஈரோடிலிருந்து ராமநாதபுரம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது கொடைக்கானலில் இருந்து இருவர் பைக்கில் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். 4வழிப்பாதை நெடுஞ்சாலையில் பைக் சறுக்கி விட ஜெபஸ்டின் ராஜ், பிரதீஷ் என்ற இரண்டு வாலிபர்கள் கீழே விழுந்தனர். காயமடைந்த இருவரும் பைக்கை நடுரோட்டில் விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அந்த அரசுப் பேருந்தின் ஓட்டுனர் நடுரோட்டில் பைக் விழுந்து கிடப்பதை கவனிக்கவில்லை. பைக்கின் மீது மோதிய வேகத்தில் பைக் பேருந்தின் அடிப்பாகத்தில் சிக்கியது. மேலும் 50மீட்டர்கள் பைக்கை பேருந்து இழுத்துச் சென்றது. இதனையடுத்து பேருந்தில் தீப்பிடித்தது.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இதனைச் சரியான நேரத்தில் கண்டுபிடித்து எச்சரிக்க, பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். பலர் தங்களது பொருட்களைக் கூட எடுக்க முடியவில்லை. பைக்குடன், பேருந்தும் முழுதும் எரிந்து எலும்புக் கூடானது.
வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பைக்கில் வந்து காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.