Published : 27 Mar 2018 09:11 AM
Last Updated : 27 Mar 2018 09:11 AM

பழநி முருகன் கோயில் தங்க சிலை செய்ததில் முறைகேடு: சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோயில் இணை ஆணையர் கைது

பழநி மலைக்கோயிலில் 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த தங்கச்சிலையில் மோசடி நிகழ்ந்துள்ளது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக கருவறையில் நவபாஷாணத்தால் ஆன சிலை உள்ளது. இது போகர் சித்தரால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நவபாஷாணம் சிலைக்கு முன்புறத்தில் மூன்றரை அடி உயரத்தில் சற்று உயரமான பீடத்தில் (கருவறையில் இருக்கும் சிலையை மறைக்கும் வகையில்) தங்கத்தால் ஆன சிலை ஒன்று, 2004 ஜன.26-ம் தேதி அப்போதைய அதிமுக அரசால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ண பணிக்கரால் பழநி மலைக்கோயிலில் பிரசன்னம் பார்க்கப்பட்டு, காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் அல்லூர் பாடசாலை சிவாச்சாரியார் உள்ளிட்டோரால் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

புதிய சிலை காரணம்

பழநி முருகன் செவ்வாய்க்கு அதிபதி என்பதால் ஆட்சி அதிகாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.

ஏற்கெனவே உள்ள மூலவர் சிலையை மறைக்கும் வகையில் இந்த தங்கச் சிலை வைக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புதிய சிலை நிறுவப்பட்டதற்கு முருக பக்தர்கள், ஆன்மிகவாதிகள் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கறுத்துப்போன சிலை

ஆனால், புதிய சிலையை அகற்ற அரசு மறுத்துவிட்டது. சில மாதங்களிலேயே தங்கத்தால் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிலை கறுத்துவிட்டது. இந்த சம்பவம் பக்தர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. இதையடுத்து பழநி மலைக்கோயிலில் புதிதாக நிறுவப்பட்டிருந்த சிலையை, 2004 ஜூன் 7-ம் தேதி அரசு அகற்றியது. அதே ஆண்டு நவ.3-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பழநி மலைக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கச்சிலை விவகாரத்தில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிலைக்காக பயன்படுத்தப்பட்ட தங்கத்திலும் மோசடி நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

போலீஸ் ரகசிய விசாரணை

தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைக்கப்பட்ட தங்கச் சிலையில் மோசடி நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில், பழநியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். அதில், சிலை வடிவமைப்பில் மோசடி நடந்துள்ளது குறித்து உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையாவையும், அப்போதைய பழநி கோயில் இணை ஆணையர் உசிலம்பட்டியைச் சேர்ந்த கே.கே.ராஜாவையும் கைது செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று அதிகாலை இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் விசாரித்த மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர், ஏப்.9-ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் நேற்று காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஸ்தபதி முத்தையா (77), காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக, ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கு தண்டனை

இதுகுறித்து பழநி நகர விஸ்வ இந்து பரிஷத் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது: பழநி கோயில் சிலை அமைத்ததில் முறைகேடு தகவல் அறிந்து பழநி மக்களும், முருக பக்தர்களும் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

சிலை வடிவமைத்ததில் நிகழ்ந்த முறைகேடு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிலை நிறுவப்பட்டபோது பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் விசாரித்து, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x