Published : 13 Mar 2018 06:33 PM
Last Updated : 13 Mar 2018 06:33 PM

சாலையோரம் பழுதடைந்த வாகனத்தை நிறுத்தியுள்ளீர்களா?- வருகிறது மாநகராட்சி நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்ற மாநகராட்சி அதிரடி முடிவெடுத்துள்ளது.

சென்னையில் முக்கிய சாலைகளில் பழைய வாகனங்கள் போக்குவரத்துக்கு பெரிய இடையூறாக உள்ளது. சென்னையின் பிரதான சாலையில் வரிசையாக ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஆதித்தனார் சாலை, சிந்தாதிரிப்பேட்டை டாம்ஸ் சாலை, தெற்கு கூவம் சாலை, லாங்க்ஸ் தோட்ட சாலை, டிரைவர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பழைய வாகனங்களை சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இது தவிர சென்னையில் உள்ள முக்கிய போக்குவரத்து இருக்கும் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதில் இரு சக்கர வாகனங்கள், மூன்று, நான்கு சக்கர வாகனங்களும் அடக்கம். மேற்கண்ட வாகனங்களை 15 நாட்களுக்குள் அகற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு இடையூறும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

மேலும், அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், பொது சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது என பல்வேறு புகார்கள் பெறப்பட்டு வருகிறது. அதனைத் தடுத்திடும் வகையில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றப்படாத வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு வட்டாரம் வாரியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் அகற்றப்படும் வாகனங்களை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 1 முதல் 5 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட சாலைகளில் அப்புறப்படுத்தப்படும் வாகனங்களை இராயபுரம் மண்டலம், கோட்டம்-58, சூளை, அவதான பாப்பையா தெருவில் மலேரியா ஸ்டோர் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி இடத்தில் நிறுத்தப்படும்.

மத்திய வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 6 முதல் 10 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட சாலைகளில் அப்புறப்படுத்தப்படும் வாகனங்களை அண்ணாநகர் மண்டலம், கோட்டம்-107, மேயர் சத்திய மூர்த்தி சாலை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை அருகிலுள்ள மத்திய தார் கலவை நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும்.

தெற்கு வட்டார அலுவலகத்தின் கீழ் வரும் 11 முதல் 15 வரையுள்ள மண்டலங்களுக்குட்பட்ட சாலைகளில் அப்புறப்படுத்தப்படும் வாகனங்களை பெருங்குடி மண்டலம், கோட்டம்-188, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை பழைய குப்பை கொட்டும் வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அகற்றப்படும் வாகனங்கள் பின்னர் ஏலம் விடப்படும். எனவே, பொதுமக்கள் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைத்துள்ள உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை, தாங்களாகவே முன்வந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.''

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x