

தமிழகத்தில் கந்துவட்டி வசூலில் மதுரை முதலிடத்தில் உள்ளது. நெல்லை, விருதுநகர் மாவட்டங்கள் 2-வது, 3-வது இடங்களில் இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென் மண்டல ஐ.ஜி. தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தரம். இவர், ரூ.11 லட்சம் கடனுக்காக ரூ.85 லட்சம் மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக இமானுவேல் உள்ளிட்ட 4 பேர் மீது காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இமானுவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி ஆசிரியர் சுந்தரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2003-ல் கந்துவட்டி தடுப்பு சட்டம் கொண்டுவந்த பிறகு போலீஸாருக்கு கந்துவட்டி தொடர்பாக வரப்பெற்ற புகார்கள், அந்தப்புகாரின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யவும், தமிழகத்தில் கந்துவட்டி புகார்களைக் கையாள தனிப்பிரிவு அமைப்பது தொடர்பாகவும் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக காவல்துறை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, மகேந்திரன் வாதிட்டனர். தமிழக காவல்துறை இயக்குநர் சார்பில் தென்மண்டல ஐ.ஜி. பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கந்துவட்டி தடுப்பு சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து மாநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு கடந்த ஜூலை 17-ல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கந்துவட்டி வழக்குகளில் தீவிரம் காட்டவும், விசாரணை அதிகாரி முழுமையாக விசாரிக்கவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும், கூடுதல் வட்டி மற்றும் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணிக்கவும், கந்து வட்டி புகார் வந்தால் முறையாக விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து 2014 ஜூலை 31 வரை தமிழகம் முழுவதும் இதுவரை கந்துவட்டி வசூல் தொடர்பாக 1531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதல் வட்டி வசூலித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கூடுதலாக வசூல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறச் சட்டத்தில் வழியுள்ளது. கந்து வட்டி வசூல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கந்து வட்டி புகார்களை கையாள்வதற்கு தனி பிரிவு தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 12-க்கு தள்ளிவைத்தனர்.
கந்து வட்டி வழக்குகளில் தமிழகத்தில் மதுரை முதலிடத்தில் உள்ளது. மதுரை மாநகரில் 188 வழக்குகளும், மதுரை மாவட்டத்தில் 220 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2வது இடத்தை நெல்லை பிடித்துள்ளது. நெல்லை மாநகரில் 30 வழக்குகளும், நெல்லை மாவட்டத்தில் 257 வழக்குகளும் பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் 237 வழக்குகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. தலைநகர் சென்னை மாநகரில் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.
திருச்சி மாநகர், மாவட்டம் சேர்ந்து 12, கோவை மாநகர், மாவட்டம் சேர்ந்து 35, சேலம் 33, திருப்பூர் 80 வழக்குகள் உள்ளன. விழுப்புரம், நீலகிரி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும், தஞ்சாவூரில் 5, கூடலூர் 6, திருவண்ணாமலை 7, தர்மபுரி 19, கிருஷ்ணகிரி 12, திண்டுக்கல் 23, தேனி 99, ராமநாதபுரம் 17, சிவகங்கை 40, தூத்துக்குடி 59, கன்னியாகுமரி 31 வழக்குகள் 2003-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கந்துவட்டி தொடர்பாக வழக்குகள் இல்லை என்பது ஆறுதலானது.
1531 வழக்குகளில் 297 வழக்குகள் விசாரணையில் உள்ளன. கந்துவட்டி வழக்குகளில் 20 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 388 பேர் விடுதலையாகியுள்ளனர். 401 வழக்குகள் விசாரணைக்கு பின் கைவிடப்பட்டன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட வட்டியைவிட கூடுதல் வட்டி வசூலித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கூடுதலாக வசூல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறச் சட்டத்தில் வழியுள்ளது.