Published : 23 Sep 2014 06:31 PM
Last Updated : 23 Sep 2014 06:31 PM

பாதுகாப்பு கோரும் திருப்பூர் ஸ்ரீ நகர் இஸ்லாமியர்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அளித்த மனுக்களை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

திருப்பூர், ஸ்ரீ நகரில் மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மசூதி கட்டி, கடந்த 22 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சில நபர்கள், இஸ்லாமியர்கள் யாரும் ஸ்ரீ நகர் பகுதியில் இருக்கக்கூடாது என்று மிரட்டி வருகின்றனர். மேலும், வாடகைக்கு குடியிருந்து வந்த இஸ்லாமிய மக்களை, வீட்டு உரிமையாளர்களிடம் கூறி காலி செய்ய வைத்துவிட்டார்கள். இதேபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அளிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் நிர்வாகிகள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் மனு அளித்தனர்.

பயனாளிகள் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சியில் கால்நடைகள் வளர்ப்பு கொட்டகை அமைப்பது தொடர்பாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில், உண்மையான பயனாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்; புறக்கணிக் கப்பட்டுள்ளனர். தற்போதைய பட்டியலை பஞ்சாயத்து, கிராமசபை கூட்டத்திலும் ஒப்புதல் பெறவில்லை. எனவே, இப்பட்டியலை ரத்து செய்து, உண்மையான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டுமென, பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத்தின் 7-வது வார்டு உறுப்பினர் எம்.மகேந்திரன் மனு அளித்தார்.

சுரங்கப் பாதை பணிகளை நிறுத்த வேண்டும்

திருப்பூர் மாநகர், வளர்மதி பாலம் அருகே நொய்யல் ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை அருகே சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. சுரங்கப் பாதை அமைய உள்ள இடம், உச்சநீதிமன்றத்தின் ஆட்சே பனைக்கு உட்பட்ட நீர்நிலையை ஒட்டியுள்ளது. தற்போது புனரமைக்கப்பட்டுவரும், மாநகரிலுள்ள ஒரே ஒரு பொழுதுபோக்கு பூங்காவும் இங்குதான் உள்ளது. பூங்கா பாதிக்கப்படும் என்பதால், சுரங்கப் பாதை பணியை உடனடியாக நிறுத்த வேண்டுமென, இந்த சுரங்கப் பாதை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை அருந்ததியர் பாசறை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன் மனு அளித்தார்.

ஜெய்வாபாய் பள்ளி நிலத்தை மீட்க வேண்டும்

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு ஏக்கர் நிலத்தை, ரோட்டரி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

இந்த வழக்கில், அந்த நிலம் ஜெய்வாபாய் பள்ளிக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. மாநகராட்சி பள்ளி மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, நிலத்தை மீட்டு ஜெய்வாபாய் பள்ளி நிர்வாகத்தினரிடம் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நல்லூர் நுகர்வோர் நலச் சங்கத்தின் சண்முகசுந்தரம் மனு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x