Published : 04 Mar 2018 11:53 AM
Last Updated : 04 Mar 2018 11:53 AM

விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னையில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிக்க முடிவு: நடப்பு நிதியாண்டிலிருந்து வசூலிக்க நடவடிக்கை

விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னை மாநகராட்சிப் பகுதியில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்களிடம் நடப்பு நிதியாண்டில் இருந்து சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியின் பரப்பு கடந்த 2011-ம் ஆண்டு 176 சதுர கிமீ-யில் இருந்து 426 சதுர கிமீ ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சென்னையை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் இருந்து 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் என 250 சதுர கிமீ பரப்பு இணைக்கப்பட்டது.

தற்போது, விரிவாக்கம் செய்வதற்கு முந்தைய சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்கள் உள்ளன. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்கள் உள்ளன.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, முந்தைய உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி விதித்து வந்தன. அந்த பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று, அவற்றுக்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால் விரிவாக்கம் செய்வதற்கு முந்தைய சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ல் உள்ள விதிகளின்படி சொத்து வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்குவதை நீக்கும் விதமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகர முனிசிபல் சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்வதற்கு முந்தைய மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை நடப்பு நிதியாண்டில் வந்திருப்பதால், இந்த நிதியாண்டின் 2-ம் அரையாண்டிலிருந்து வரி விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கான சொத்து வரி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியை விட 1.6 மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு, குடியிருப்பு பகுதிக்கு ஒரு சதுரஅடிக்கு ரூ.1 சொத்து வரி வசூலிக்கப்பட்டால், அங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1.60 வசூலிக்கப்படும்.

வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் சொத்து வரியை விட இது மிகவும் குறைவானது. தற்போது விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னை பகுதிகளில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களின் விவரங்கள், அவற்றின் பரப்பு, ஆண்டுக்கு மாநகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாய் ஆகியவை குறித்து கணக்கிட்டு வருகிறோம்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x