

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவினர் நடத்திய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.இதுகுறித்து வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்த முதல்வர், ‘பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்விதமாக இருப்பினும் தமிழகத்தில் அமைதி காக்க வேண்டும்’ என்று தன் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டிய கடமையைச் செய்யத் தவறினார். பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புத் தரவேண்டியது அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை ஆகும். ஆனால், நேற்று அரசு இயந்திரம் முற்றிலும் செயலற்றுக் கிடந்தது. ஆளுங்கட்சி அராஜகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
இதற்கு முன்பு இப்படி நடைபெற்ற அராஜகச் சம்பவங்களின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றமே ஆணையிட்டது. இதனை மனதில் கொண்டு, நேற்றைய அராஜகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்குகின்ற விதத்தில் வன்முறையாளர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆளும் அதிகாரத்தில் உள்ள கட்சியினரே வன்முறைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. பொது அமைதியும், பொது மக்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டப்படி மேல் முறையீட்டைச் செய்து தங்களுக்குப் பரிகாரம் தேடுவதுதான் ஜனநாயகத்தில் முறை.
நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால் அதனை எதிர்த்து ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது மிகவும் தவறான, ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும். நாட்டில் அமைதி நிலவ, பொதுச் சொத்துகள் காப்பாற்றப்பட, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட, பொதுமக்களும் விழிப்பாக இருந்து ஒத்துழைக்க வேண்டும்.