Published : 11 Mar 2018 10:47 AM
Last Updated : 11 Mar 2018 10:47 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தினால் மத்திய அரசு எதிர்வினையை சந்திக்க நேரிடும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தினால் அதற்கான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு குறிப்பிட்டுள்ளதால், அவ்விஷயத்தில் பேசுவதற்கு ஏதும் இல்லை. ஆனாலும்,

மத்திய நீர்வளத்துறை கடந்த 9-ம் தேதி டெல்லியில் கூட்டிய கூட்டத்தில், தலைமைச் செயலர் பங்கேற்று புதுச்சேரி அரசின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். கர்நாடகமோ, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றல் குழு ஆகிய இரண்டையும் அமைக்க ஆயத்தப் பணிகளை செய்யும்படிதான் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாக கூட்டத்தில் தெரிவித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளபடி காரைக்காலில் 41 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் குறுவை சாகுபடி செய்வதற்கும், குடிநீருக்கும் நீர் தர வேண்டும்.

ஏற்கெனவே காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் ஒழுங்காற்றல் குழு அமைத்து கண்காணிக்க கூறியுள்ளது. எனவே இது புதியது அல்ல. காலம் குறைவாக இருப்பதால் மத்திய அரசு தாமதிக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு போகப்போகத்தான் தெரியும். மத்திய அரசு காலம் தாழ்த்தினால் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். டெல்டாவில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x