

சென்னையில் மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து கேளம்பாக்கம் வரையிலும், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் மாநகர பஸ்களுக்கு தனிப்பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதிய பஸ்களை வடிவமைக்கவும் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் முக்கியமான சாலைகளில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகர பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்ல வேண்டியிருப்ப தால் எரிபொருள் செலவு அதிகரிக்கி றது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் இருப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருந்தது. தற்போது ஏராளமான ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், குடியிருப்புகள் அமைந்திருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு மட்டுமே தினமும் 1,200 பஸ்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இயக்கப்படுகின்றன. இத்துடன் மாநகர பஸ்களும் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக மாறியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தனியார் வாகன பயன்பாட்டை குறைக்கவும், விரைவாக பயணம் செய்யவும் மாநகர பஸ்களை தனிப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போக்கு வரத்து அதிகாரிகளைக் கொண்ட குழு அகமதாபாத்துக்கு சென்று ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கையை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநகர பஸ்களுடன், தனியார் வாகனங்களும் செல்வதால் சென்னையில் முக்கிய சாலைகளில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விரைவாக செல்லவும் மாநகர பஸ்களுக்கென்று தனிப் பாதைகள் அமைக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்.
சென்னையின் உட்பகுதிகளில் உள்ள சில சாலைகளில் இது போன்ற பாதைகளை அமைப்பது கடினம். ஆனால், ஈசிஆர் (மத்திய கைலாஷ் – கேளம்பாக்கம்), ஓஎம்ஆர் (திருவான்மியூர் – மாமல்லபுரம்) உள்ளிட்ட சாலை களில் அமைக்க போதிய இடம் உள்ளது. இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மத்திய கைலாஷில் இருந்து கேளம்பாக்கம் வரை சுமார் 35 கி.மீ. தூரத்துக்கு பஸ்களுக்கு என தனிப்பாதைகள் அமைக்கப்படவுள்ளது.
தற்போது முழுமையாக ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை ஐஐடி குழுவினர் தொழில்நுட்ப பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்ற னர். பணிகள் முடிந்தவுடன் இந்த தனிப்பாதைகளில் இயக்க சிறப்பு அம்சங்களைக் கொண்ட பஸ்கள் வடிவமைக்கப்படவுள்ளன.
தனிப்பாதைகளில் பஸ்களை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போதுள்ள தைக் காட்டிலும் 50 சதவீத நேரம் மிச்சமாகும். விபத்துகள் குறையும். அரசு பஸ்களை பயன்படுத்து வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.