

வாகன சோதனையின்போது இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததால் பலியான உஷா கர்ப்பிணி இல்லை என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சூலமங்களத்தைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் கடந்த 7-ம் தேதி இரவு தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக, துவாக்குடி அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
அவர்கள் மறித்தபோது, நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ், விரட்டிச் சென்று எட்டி உதைத்ததில் தடுமாறி கீழே விழுந்த உஷா அந்த இடத்திலேயே பலியானார்.
உஷாவின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 304 (II), 336 ஆகிய பிரிவுகளின் கீழ் பெல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காமராஜை கைது செய்து, கடந்த 8-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே உஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அதன் காரணமாக தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாகக் கூறி இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உஷா மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் நேற்று பெல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் ஒப்படைத்தனர். அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவரது வலதுபுற சினைப்பையில் ஒரு கட்டி இருப்பதாகவும், இடதுபுற சினைப்பையில் கரு ஏதும் இல்லாமல், இயல்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண், ‘தி இந்து’விடம் கூறும்போது, “உஷாவின் பிரேத பரிசோதனையில் அவர் கர்ப்பம் அடைந்திருக்கவில்லை எனவும், கர்ப்பப்பை காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, அவர் கர்ப்பமாகவே இருந்திருந்தாலும், அதனால் வழக்கு விசாரணையிலோ, பிரிவுகளிலோ எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.
ஏற்கெனவே அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது தேவையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து உஷாவின் கணவர் ராஜாவிடம் கேட்டபோது, “குழந்தை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தோம். சில நாட்கள் சிகிச்சையை நிறுத்திவிட்டோம். இடையில் ஒருநாள், 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என உஷா என்னிடம் கூறினார். சந்தோஷத்தில் இருந்தோம். மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துப் பார்க்கலாம் என்றிருந்தோம். ஆனால், அதற்குள் இறந்துவிட்டார். கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. என் மனைவி உயிருடன் இல்லை, சாட்சியும் இல்லை என்பதால் ஆளாளுக்கு ஏதேதோ பேசுகின்றனர். உஷாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்துவந்த பிறகு, வழக்கின் போக்கையே மாற்றிவிட்டனர். போலீஸார் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்” என்றார்.