Published : 14 Mar 2018 11:03 AM
Last Updated : 14 Mar 2018 11:03 AM

இளம் வயதினரை நல்வழிப்படுத்தும் சிறுவர், சிறுமியர் மன்றங்களை முறைப்படுத்துமா காவல்துறை?

கோவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகைப்பறிப்பு குற்றங்கள் அதிகமாகியுள்ளன. அதில் பெரும்பாலும் இளம் வயதினரே ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சிகரமான தகவல். கடந்த வாரம் செல்வபுரத்தில் பள்ளிச்சிறுவர்கள் இருவர் நகைப்பறிக்க முயன்று சிக்கிக் கொண்டதும் அதன் தொடர்ச்சியே. வளரிளம் பருவத்தினரிடையே பெருகி வரும் போதைப் பொருள் பயன்பாடு, குற்றச் சம்பவங்களின் ஈடுபாடு போன்றவை போலீஸாருக்கே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமே இந்த பாதிப்பை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில்தான் கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க காவல்துறை என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. அதில், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தி, வளரிளம் பருவத்திலேயே அவர்களை சிறப்பாக வழிநடத்த காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன.

1962-ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில், தமிழகத்திலேயே முதல்முறையாக இத்திட்டம் கொண்டு வரப்பட்ட மாவட்டம் என்ற பெருமையும் கோவைக்கு உண்டு. பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆர்வத்தோடு நின்றுவிட்டது. இப்போது பல இடங்களில் இந்த மன்றங்கள் செயல் இழந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறுவர், சிறுமியர் மன்றங்களை முழுவீச்சில் செயல்படுத்தினாலே பிரச்சினைகள் பெருமளவு குறையும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

நேரு நகர் மன்றம்

கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் 15 காவல்நிலையங்கள் செயல்படுகின்றன. அதில் 13 காவல்நிலையங்களின் கீழ் தலா ஒரு சிறுவர், சிறுமியர் மன்றங்கள் இருக்கின்றன. அதில் ஒரு சில மட்டுமே இயங்குகின்றன. மாணவர்களுக்கு பள்ளிப்படிப்போடு நல்லொழுக்கங்களையும், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகளையும் கொடுக்கக்கூடிய இந்த மன்றங்கள் பல இடங்களில், சமூகவிரோதச் செயல்களின் கூடாரமாக மாறியுள்ளன. அதற்கு சரியான உதாரணமாக இருக்கிறது பூசாரிபாளையம் நேருநகரில் உள்ள சிறுவர், சிறுமியர் மன்றம்.

மாநகராட்சி தொடக்கப்பள்ளியாக இருந்த அந்த வளாகம், சில ஆண்டுகளாக காவல் சிறுவர், சிறுமியர் மன்றமாக மாற்றப்பட்டது. பின்னர், காவல்துறையினர் ஆர்வம் காட்டாததால் பராமரிப்பின்றி விடப்பட்டது. கடந்த வாரம் வரை திறந்த வெளிமதுக்கூடமாக காணப்பட்ட அந்த வளாகம், அங்குள்ள மக்கள் எதிர்ப்பின் காரணமாக பூட்டப்பட்டுள்ளது. இருப்பினும், நன்றாகச் செயல்பட வேண்டிய மன்றமும், அதற்கான பள்ளி வளாகமும் பாழடைந்து கொண்டிருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சேகர் என்பவர் கூறும்போது, ‘நான் இங்குதான் படித்தேன். சமீபத்தில் பள்ளி இடமாற்றப்பட்ட பிறகு சிறுவர் மன்றம் கொண்டுவரப்பட்டது. அதுவும் இப்போது இல்லை. இரவில் யார் யாரே உள்ளே செல்கிறார்கள். உள்ளே இருக்கும் வகுப்பறைகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். புகார் கொடுத்ததால் இப்போது பூட்டி வைத்திருக்கிறார்கள். முறையாகப் பயன்படுத்தினால் பலருக்கும் பயன்படும்’ என்றார்.

இத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘கோவையில் 13 மன்றங்களில் சுமார் 600 மாணவர்கள் உள்ளனர். 8 முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கிறோம். பல இடங்களில் இந்த மன்றங்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது. செல்வபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள மன்றத்தின் செயல்பாடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார்.

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி (சட்டம் ஒழுங்கு) கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கிறோம்.

சிறுவர் சிறுமியர் மன்றங்களை தொடர்ந்து நல்ல முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x