Published : 21 Mar 2018 08:06 AM
Last Updated : 21 Mar 2018 08:06 AM

சசிகலா புஷ்பா எம்.பி.யை என் கணவர் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும்: மதுரை ஆட்சியரிடம் இளம்பெண் மனு

சசிகலா புஷ்பா எம்.பி.யை தனது கணவர் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இளம் பெண் ஒருவர் கைக் குழந்தையுடன் வந்து மனு அளித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும், அவரது சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் ராமசாமிக்கும், தமக்கும் 2014-ல் திருமணம் நடந்ததாகவும், தங்களுக்கு ரிதுசனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருப்பதாகவும் கூறி, மதுரை மாகாளிபட்டியைச் சேர்ந்த சத்யபிரியா (34) என்பவர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே மனு அளித்திருந்தார். ராமசாமியை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் சத்யபிரியா கூறியது:

டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி அகாடமி நடத்தி வரும் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ராமசாமிக்கும், எனக்கும் 2014-ல் திருமணம் நடந்தது. கணவருடன் டெல்லியில் வசித்து வந்தேன். திருணத்துக்காக 90 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. எனினும், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கூடுதல் நகை, பணம் கேட்டு எனது கணவர் பிரச்சினை செய்ய ஆரம்பித்தார். பின்னர் மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன். கர்ப்பமாக இருந்தபோது கூட அவர் என்னை பார்க்க வரவில்லை.

எங்களுக்கு கடந்த 2016-ல் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்துவிட்டது என்பதால் இதுவரை என்னை பார்க்க அவர் வரவில்லை. அவரது சகோதரிகள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சட்டம் படித்துள்ள என் கணவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவிடம் பணிபுரிவதாக 3 மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. தற்போது, சசிகலா புஷ்பாவையே திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து அவரிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்க மறுக்கிறார். சசிகலா புஷ்பாவுடன் என் கணவர் திருமணம் நடைபெற இருந்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். கணவரை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x