

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக் - திவ்யா உயிரிழந்தனர். தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர்.
இந்த விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்.
புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்:
குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக் - திவ்யா பரிதாபமாக உயிரிழந்தனர்.
விவேக் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்துக்காக அவர் விடுமுறையில் வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் விவேக்குக்கும் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
திவ்யா தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அடுத்த வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.