Published : 17 Mar 2018 03:20 PM
Last Updated : 17 Mar 2018 03:20 PM

கொலை செய்ய வந்த கூலிப்படை நபர்: கத்திமுனையில் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்

சோழிங்கநல்லூரில் பெண்ணைக் கொல்ல வந்து,  கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த கூலிப்படை நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

சென்னை சோழிங்கநல்லூர் கருணாநிதி நகர், கிராம நெடுஞ்சாலையில் வசிப்பவர் நர்ஷத் அக்தர் (25). இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்குத் திருமணமாகி மனைவி திரிபுராவில் வசிக்கிறார். இவர் பல ஆண்டுகளாக சோழிங்கநல்லூரில் பாஸ்ட்புட் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் பல வருடங்களாக வசித்து வரும் நர்ஷத், நர்கீஸ் (22) என்ற பெண்ணை சிலமாதங்களுக்கு முன் திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அக்தர் சென்னையில் இரண்டாவது மனைவியுடன் வசிப்பது திரிபுராவில் உள்ள முதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அவரது ஊரைச்சேர்ந்த ஜாகீர் உசேன் எனபவரிடம் தனது கணவரின் இரண்டாவது மனைவி நர்கீஸை கொலை செய்யக் கூறியுள்ளார்.

இதற்கு கூலியாக ரூ.50 ஆயிரம் பேசப்பட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நர்கீஸை கொலை செய்ய திட்டமிட்ட அவர் நேற்று முன் தினம் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து கத்தியுடன் நர்கீஸை கொலை செய்ய அக்தர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டினுள்ளே சென்று நர்கீஸை கொலை செய்ய முயன்ற ஜாகீர் உசேன் நர்கீஸைப் பார்த்ததும் அவரது அழகில் மயங்கி கத்தி முனையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி விட்டுச் சென்றார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அழுதபடி இருந்த நர்கீஸ் கணவர் அக்தர் பணி முடிந்து வந்தவுடன் நடந்ததைக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்தர் உடனடியாக இது குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்ற போலீஸார் நீண்ட தேடலுக்குப் பின் காரப்பாக்கத்தில் பதுங்கி இருந்த ஜாகீர் உசைனைக் கைது செய்தனர்.

போலீஸார் விசாரணையில் தான் திரிபுராவைச் சேர்ந்தவன் என்றும், நர்ஷத்தின் முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது மனைவியைக் கொலை செய்ய ரூ.50 ஆயிரம் கொடுத்தார் என்றும், கொலை செய்யும் நோக்கத்தில் சென்ற தாம் மனம் மாறி தவறு செய்துவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவரைக் கைது செய்துள்ள போலீஸார், ஜாகீர் உசேன் ஏற்கெனவே வேறு ஏதும் குற்றச்செயலில் ஈடுபட்டவரா? என்பதைப் பற்றி விசாரிக்க திரிபுரா போலீஸாருக்கு தகவல் அனுப்பி உள்ளனர். கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x