Published : 04 Sep 2014 01:24 PM
Last Updated : 04 Sep 2014 01:24 PM

மாணவர்களிடம் தமிழ் மொழிப்பற்று உணர்வை ஆசிரியர்கள் வளர்த்திட வேண்டும்: கருணாநிதி

மாணவர்களிடம் தமிழ் மொழிப்பற்று உணர்வை ஆசிரியர்கள் வளர்த்திட வேண்டும் என்று ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "ஆசிரியப் பணிபுரிந்து, அறிவாற்றலால் உயர்ந்து, தம் சான்றாண்மைக் குணங்களால் சிறந்து, சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், பின்னர் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் விளங்கிப் புகழ் படைத்தவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். அவர்தம் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆம் நாள் நாட்டின், "ஆசிரியர் நாள்" என - ஆசிரியப் பெருமக்களின் அரிய தொண்டுகளைப் போற்றி ஆண்டுதோறும் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் அடுத்த தலைமுறை மக்களை அறிவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டுத் திறனிலும், சீரிய பண்பாட்டு உணர்விலும் சிறந்தவர்களாக உருவாக்கிடும் திருப்பணியில் வாழ்நாள் முழுதும் தொண்டுகளாற்றிடும் பெருமைக்குரிய ஆசிரியப்

பெருமக்களுக்கு அரசு சார்பில் "டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது" வழங்கிப் பெருமைப்படுத்தப்படுகிறது.

ஆசிரியர் சமுதாயம் முழுதும் மகிழும் வகையில், "நல்லாசிரியர் விருது" என வழங்கப்பட்ட விருதின் பெயரை, 1997இல் "டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது" என்றும், விருதுக்குரிய பரிசுத் தொகை ரூ.500 என்பதை 1989இல் ரூ.1,000 என்றும், 1997இல் ரூ.2,000 என்றும், பின் 2008இல் ரூ.5,000 என்றும் உயர்த்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசே என்பதை இவ்வேளையில் நினைவுபடுத்துகிறேன்.

"ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்" என்று கூறிய அண்ணாவின் மணிமொழியை இதயத்தில் தாங்கி, ஆசிரியர் சமுதாயத்திற்கு அளவிலாச் சலுகைகள் பலவற்றை வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் நான்கு ஊதியக்குழுக்களை அமைத்து; அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலைகளை உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழிவகுத்தவன் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

அதேநேரத்தில் 2001ல் அமைந்த அ.தி.மு.க. அரசு, கழக அரசு அளித்த சலுகைகளை எல்லாம் பறித்துக் கொண்டதால் அதை மீண்டும் வழங்கக்கோரி போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, நள்ளிரவு என்றும், பெண்கள் என்றும் பாராமல் வீடுபுகுந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததையும்; அத்துடன் அந்த அரசு ஒரே கையொப்பத்தில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் நிரந்தரமான வேலை நீக்கத்தைப் பரிசாகத் தந்ததையும் எவரும் மறந்திட முடியாது.

தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் நியமனங்களிலும், மாறுதல்களிலும், வெளிப்படைத் தன்மையே அற்றுப் போய் விட்டதோடு, ஏராளமான குளறுபடிகளும் நுழைந்து விட்டன. தங்களுடைய குறைகளைத் தெரிவித்துப் போராடும் ஆசிரியப் பெருமக்களை ஆட்சியினர் சந்திக்க மறுப்பதும், அதன் காரணமாக விரக்தியடைந்து ஆசிரியர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதும் மிகுந்த வேதனையைத்

தருகிறது. அந்த அ.தி.மு.க. ஆட்சிபோல் அல்லாமல் ஆசிரியர், அரசு ஊழியர் நலனில் என்றும் அன்பும், அக்கறையும்; கனிவும், கரிசனமும் கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களையும், ஏராளமான சலுகைகளையும் வழங்கியவன் நான் என்பதைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

பல தமிழ் சான்றோர்களும் ஊட்டிய தன்மான உணர்வுகளால் தமிழக நலன்கருதி தமிழ் மொழி, இனச் சிந்தனைகள் செழித்தது. மறைந்து கொண்டிருந்த தமிழ் மொழியை மீட்கும் வகையில் பல்லாண்டு காலம் போரிட்டு உயிர்ப்பலி தந்து தமிழகத்தில்

நடைமுறையில் இருந்த "ஆகாஷவாணி" என்பதை "வானொலி" என்றும்; "பிராந்திய செய்திகள்" என்பதை "மாநிலச் செய்திகள்" என்றும்; "லோக்சபா" என்பதை "மக்களவை" என்றும்; "கனம் மந்திரி" என்பதை "மாண்புமிகு அமைச்சர்" என்றும்; "சட்டசபை" என்பதை "சட்டமன்றம்" என்றும் இவைபோல் வடசொல் ஆதிக்கத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து, புழக்கத்தில் கொண்டு வந்து - எல்லாம் தமிழாகி படிப்படியாக வடசொல்லாதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தேசியம் என்ற பெயரில், "ஆசிரியர் நாள் விழா" என நாம் அழைத்து வரும் தமிழ்ச் சொற்றொடர் மதிப்பிழக்கும் வகையில், "குரு உத்சவ்" எனும் வடசொல் தமிழகப் பள்ளிகளில் புகுத்தப்படுகின்ற கொடுமை தற்போது அரங்கேற்றப்படுகிறது. இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்நிலையில், வளரும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் அறிவு வளர்ச்சிப் பயிர் செய்திடும் பொறுப்பில் உள்ள ஆசிரியப் பெருமக்கள் நாட்டுப் பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழ் மொழிப்பற்று உணர்வை வளர்த்திட வேண்டும். தமிழகத்தின் நலனை - தமிழ்ச் சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பினையும் மேற்கொண்டிட வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து; தமிழக ஆசிரியப் பெருமக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது "ஆசிரியர் நாள்" நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x