Published : 15 Mar 2018 10:32 AM
Last Updated : 15 Mar 2018 10:32 AM

சுபாஷ் சந்திர கபூரின் கன்னத்தில் அறைந்த யுவராஜ்: திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திர கபூரின் கன்னத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜ் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் இருந்து பழங்கால சிலைகளைத் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவர், 2016-ல் இருந்து திருச்சி மத்திய சிறையில், உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவரும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனருமான யுவராஜூம் திருச்சி மத்திய சிறையில், உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை சிறை வளாகத்திலுள்ள பொதுக் குழாயின் அருகே சுபாஷ் சந்திர கபூர் தனது ஆடைகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, குழாயில் இருந்து அதிகளவு நீர் வெளியேறி வீணாகிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட யுவராஜ், சுபாஷ் சந்திர கபூரிடம் சென்று, “ஏன் இப்படி நீரை வீணாக்குகிறாய்” எனக் கேட்டுள்ளார். அதற்கு, “பொது குழாய்தானே? நீங்கள் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என சுபாஷ் சந்திர கபூர் ஆங்கிலத்தில் பதில் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த யுவராஜ், திடீரென சுபாஷ் சந்திர கபூரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். வலி தாங்க முடியாமல் சுபாஷ் சந்திர கபூர் கூச்சலிட்டதால், அருகிலிருந்த காவலர்கள் ஓடிவந்து யுவராஜைப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

யுவராஜ் தன்னை தாக்கியது குறித்து சிறை நிர்வாகத்திடம் சுபாஷ் சந்திர கபூர் புகார் செய்தார். அதன்பேரில் யுவராஜ், சுபாஷ் சந்திர கபூர் ஆகிய இரு வரையும் அழைத்து சிறை கண் காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து யுவராஜை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் சிறைக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x