

மதுரை அருகே மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து தேடியும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. சந்தேகத் தின்பேரில் சிக்கிய 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டியை சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா(18), சங்கரபாண்டி மகள் அங்காளஈஸ்வரி (19). திருமங் கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவிகளான 2 பேரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய போது ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகினர். எதிரே வந்த ஒருவர் திடீரென பாட்டிலில் கொண்டுவந்த ஆசிட்டை மாணவிகளின் முகத்தில் வீசிவிட்டு தப்பிவிட்டார். மாணவிகள் 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீனா கொடுத்த புகாரின்பேரில் கொலை முயற்சி, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் திரு மங்கலம் நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். திருமங்கலம் நகர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை யில் 5 தனிப்படையை சேர்ந்த 100 போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடம், மாணவியின் சொந்த கிராமத்தில் மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி சனிக்கிழமை அதிகாலைவரை விசாரணை நடத்தினார்.
நேற்று மாணவிகள் 2 பேரும் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தீக்காய பிரிவுக்கு மாற்றப்பட்டனர். ‘மீனாவின் முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். அங்காளஈஸ்வரிக்கு ஓரிரு நாள் சிகிச்சை அளித்த பின்னரே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவையா என தெரியவரும். இவரது உயிருக்கு ஆபத்து இல்லை’ என்று மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸார் தவிப்பு
மாணவியின் சொந்த ஊரான சின்ன பூலாம்பட்டியில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மீனாவின் தந்தை இறந்து 22 நாட்களே ஆவதால், அவரது உறவினர்கள் யாருடனும் பிரச்சினை உள்ளதா என விசாரித்தனர். மீனாவை உறவினர்கள் யாரும் பெண் கேட்டனரா, அவரை ஒருதலைப் பட்சமாக யாரும் காதலித்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரித் தனர். இதில் சரியான காரணம் சிக்காததால் குற்றவாளியை அடையாளம் காண முடியாமல் போலீஸார் தவிக்கின்றனர். இதனால் சம்பவ இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்த லாரி டிரைவர்கள் சுரேஷ்குமார், மாயாண்டி மற்றும் சதீஷ்குமார், சக்திவேல் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களின் புகைப் படங்களை மீனாவிடம் காட்டி விசாரித்தனர். மீனாவின் செல்போன் எண்களையும் போலீ ஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
செல்போன் டவர் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் பேசப்பட்ட போன் எண்கள் மூலமும் விசாரணை நடக்கிறது. வீசப்பட்ட ஆசிட் கழிவறை சுத்தம் செய்யவும், கட்டிடங்களில் படிந்துள்ள கறைகளை அப்புறப்படுத்த பயன் படுத்தும் வகையை சேர்ந்தது என தெரிந்துள்ளது. இந்த ஆசிட் விற்கப்படும் இடங்கள், சம்பவத் தன்று ஆசிட் வாங்கியவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்தனர்.
நெருங்கிவிட்டோம்: எஸ்.பி.
எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறும்போது, ‘‘இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. கிடைத்த தகவல் அடிப்படையில் குற்றவாளி என ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். அவர் சிக்கினால்தான் எதையும் உறுதியாக கூற முடியும். சனிக்கிழமை இரவுக்குள் குற்றவாளியை கைது செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.