Published : 03 Mar 2018 10:26 AM
Last Updated : 03 Mar 2018 10:26 AM

இந்தியாவில் 10% மக்களிடம் குவிந்துள்ள 91% சொத்துகள்: இளைஞர்கள் கேள்வி எழுப்ப வருண் காந்தி எம்.பி. வலியுறுத்தல்

இந்தியாவில் 10 சதவீத மக்களிடம் 91 சதவீத சொத்துகள் குவிந்துள்ளன. இது குறித்து இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வருண் காந்தி கூறினார்.

‘நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான மாநாடு கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வருண்காந்தி எம்.பி. பேசியதாவது: சமூக மாற்றங்கள் தனி ஒருவரால் தொடங்கப்படுகின்றன. பின்னர் அது ஓர் இயக்கமாக மாறுகிறது. இளைஞர்களின் சக்தி வியப்படைய வைக்கும் அளவுக்கு உள்ளது. ஆனால், அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு செயல் திட்டம் எதுவும் இருப்பதில்லை என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. எனினும், இதில் உண்மையில்லை.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்தி தொடங்கப்பட்ட ‘வால் ஸ்ட்ரீட்’ இயக்கம் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவின் மொத்த சொத்துகளில் 50 சதவீதம் ஒரு சதவீத அமெரிக்கர்களிடம் மட்டுமே இருப்பதை இளைஞர்கள் சுட்டிக் காட்டினர். இந்தியாவில் 10 சதவீத மக்களிடம் 91 சதவீத சொத்துகள் உள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் பேரிடம் வெறும் 9 சதவீத சொத்துகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவைப்போல், இந்திய இளைஞர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பி, விவாதிக்க வேண்டும்.

தற்போது வேலையின்மை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சியால் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 75 ஆயிரம் மென்பொருள் பொறியாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாட்டில் உள்ள 500 முன்னணி கல்லூரிகளில் பயின்றவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. படிக்கும்போதே வேலைக்கான திறனை வளர்த்துக் கொள்ளாததால், வேலை கிடைப்பது அரிதாகி வருகிறது.

நாசா, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். ஆனால், இந்திய கல்வி முறை ஆடம்பரமானதாக மாறியுள்ளது. இந்தியாவில் கல்விக்கு ஒதுக்கிய ரூ.1.30 லட்சம் கோடியில் 87 சதவீதம் தொகை கட்டிடங்களுக்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் மட்டுமே கல்வித் தரத்தின் அடையாளங்கள் அல்ல. மரத்தடியில் படித்த நமது முன்னோர், நம்மைக்காட்டிலும் அறிவாளிகளாக இருந்துள்ளனர். நாட்டில் சமூக நீதிக் கொள்கையை சரிவர அமல்படுத்தப்படாததால்தான், பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன.

பெங்களூரு கப்பன் பார்க்கில் ஒரு மரத்தை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து 8 ஆயிரம் இளைஞர்கள் போராடியதால், அந்த மரம் காப்பாற்றப்பட்டது. இதுதான் இளைஞர்களின் சக்தி. இளைஞர்கள் தடைகளைத் தாண்டி, சாதிக்க வேண்டும். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாமல் எந்த மாற்றத்தையும் நம்மால் கொண்டு வர முடியாது. எளிய மக்களின் குரல் சட்டப்பேரவை, மக்களவையில் எதிரொலிக்க வேண்டும்..

இந்திய மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் பெண்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் 11 சதவீதம், சட்டப்பேரவைகளில் 9 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக, அவர்களது கணவர், தந்தை உள்ளிட்டோர் செயல்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

உலகின் அழகான நகரங்களில் ஒன்றான கேப்டவுன், தற்போது தண்ணீர் இல்லாத நகரமாகியுள்ளது. அதேபோல பெங்களூருவிலும் 9 சதவீதம் மட்டுமே நிலத்தடிநீர் இருப்பதாகவும், அடுத்த 30 ஆண்டுகளில் அதுவும் முற்றிலும் வறண்டுபோகும் என்றும் கூறுகின்றனர். தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டியது அவசியம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x