

புயல் எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டம் தூத்தூரில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 600 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். ஒக்கி புயலுக்கு பிறகு கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், குமரி கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதேபோல் சின்னமுட்டம், குளச்சல், முட்டம், தேங்காய்ப்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை நீடிப்பு
இந்நிலையில், நேற்று முதல் மேலும் 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறையினர் கடலோர கிராமங்களில் ரோந்து வந்தவாறே ஒலிபெருக்கி மூலம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தனர். நேற்று காலையில் இருந்து குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய் தது.
இந்நிலையில், தூத்தூரில் இருந்து 10 தினங்களுக்கு முன்பு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, புயல் சின்னம் குறித்து உரிய முறையில் தகவல் சென்று சேராததால் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொதுசெயலாளர் சர்ச் சில் கூறும்போது, ‘தூத்தூரிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 70-க்கும் மேற்பட்ட படகு கள் திரும்பவில்லை. அதிலிருந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஒக்கி புயல் போன்ற பேரி டர் நிகழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படையினர் மூலம் தகவல் கிடைக்கப் பெற்ற 30 படகுகள் லட்சத்தீவின் கல் பானி பகுதியில் நேற்று காலை கரை ஒதுங்கி உள்ளன. ஆனால், தூத்தூரில் இருந்து சென்ற 600 மீனவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுபற்றி அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்’ என்றார் அவர்.