Published : 02 Mar 2018 09:56 PM
Last Updated : 02 Mar 2018 09:56 PM

ஏ.கே.47 துப்பாக்கி, ராணுவ உடையுடன் முகநூலில் பதிவு செய்த காமெடி இளைஞர்: போலீஸ் பிடித்து விசாரணை

ஏ.கே.47 துப்பாக்கியுடன் ராணுவ உடையணிந்து பேஸ்புக்கில் படம் பதிவிட்ட டிராவல்ஸ் அதிபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் பிரபு. சொந்தமாக டிராவல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு ராணுவ அதிகாரி போல் இருக்கவேண்டும் என்று ஆசை. இவர் கடந்த சில தினங்களுக்கு முன், தனது முக நூலிலும், வாட்ஸ் அப்பிலும் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருப்பதை போன்ற புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார்.

மற்றொரு புகைப்படத்தில் ராணுவ சீருடை அணிந்து, கையில் கம்பீரமாக ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் நிற்பது போன்ற படத்தையும் பதிவிட்டிருந்தார், இதைப் பதிவிட்டதும் அல்லாமல் இந்த படங்களில், தனது செல்போன் எண் மற்றும் முகவரியையும் பதிவிட்டு இருந்தார்.

மேற்கண்ட பதிவில் உள்ள புகைப்படங்களைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் மேச்சேரிக்கு சென்று, பிரபுவை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், ''ஐயா நான் டம்மி ஆளுங்க, சும்மா ஆசைப்பட்டு நண்பரிடம் வாங்கி போட்டோ பிடிச்சு ஜாலிக்கு முகநூலில் போட்டேன்'' என்று கூறியுள்ளார்.

போர்வெல் நிறுவனத்தில் தான் மேலாளராக இருந்த போது, கர்நாடக மாநிலத்தில் தங்கியிருந்ததாகவும், அப்போது அங்கிருந்த நண்பரின் துப்பாக்கியை வாங்கி புகைப்படம் எடுத்ததாகவும், அதே போல் தனது மற்றொரு நண்பரான ராணுவத்தில் பணி புரிபவரின் சீருடை மற்றும் அவரது ஏ.கே.47 துப்பாக்கியை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும், இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் என்றும் பிரபு கூறியுள்ளார்.

ஆனால் நாட்டுத் துப்பாக்கியும், ஏ.கே.47 துப்பாக்கியும் வைத்திருப்பது சட்டப்படி மிகப் பெரிய குற்றம். அதனால் பிரபு கூறுவது உண்மையா என்பதை அறியவும் இதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள பிரபுவை, வனத்துறையினர் மேச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முகநூல் பதிவு குறித்து மேச்சேரி போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x