Published : 17 Mar 2018 09:38 AM
Last Updated : 17 Mar 2018 09:38 AM

சகாயம் குழுவின் விசாரணை முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் நடந்த கிரானைட் மோசடி தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவின் விசாரணையை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து, மதுரையில் நடந்த கிரானைட் மோசடி குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி விசாரணை நடத்தி அவர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மதுரையில் நடந்துள்ள கிரானைட் மோசடியால் மட்டும் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஜி.ஜெயசந்திரன் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பிஆர்பி கிரானைட் நிறுவனம் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘பிஆர்பி உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும்படி ரிசர்வ் வங்கிக்கும், அவற்றின் சரக்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக தொழில் முடங்கிப் போயிருப்பதால், மதுரை தவிர்த்து மற்ற ஊர்களில் கிரானைட் தொழில் புரிய அனுமதி அளிக்க வேண்டும்’ என அதில் கோரப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அரசு தரப்பில், ‘‘பிஆர்பி உள்ளிட்ட கிரானைட் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்கள் எங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்க முடியாத நிலையில், கிரானைட் ஏற்றுமதியை அனுமதிக்க முடியாது’’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பின் இந்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘கிரானைட் கற்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது அரசுக்கே தெரியாவிட்டால், அரசு இயந்திரம் செயலற்றுப் போயிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மேலும், ஒரு சிறிய நகையைக்கூட எளிதில் கண்டுபிடிக்கும் அரசு அதிகாரிகளால், தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிரானைட் கற்களின் வடிவத்தை வைத்தே அவை எங்கிருந்து வெட்டி கொண்டுவரப்பட்டவை என்று கண்டுபிடிக்க முடியாதா?’’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர், பிஆர்பி நிறுவனம் இதுதொடர்பாக அரசு அதிகாரிகளை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மதுரை கிரானைட் மோசடி தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவின் விசாரணையையும் முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது, சகாயம் தன் வழக்கறிஞர் மூலமாக ஆஜராக வேண்டும் என்ற நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x