Published : 12 Mar 2018 07:00 PM
Last Updated : 12 Mar 2018 07:00 PM

குரங்கணி சம்பவம் போல எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்க: முத்தரசன்

குரங்கணி சம்பவம் போல எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்காக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கியுள்ளது கடும் அதிர்ச்சி அளிக்கின்றது.

வெப்ப காலத்தில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவதும், சமூக விரோதிகளால் தீ ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வனத்துறையினர் மாணவிகள் மலை ஏறிச் சென்றது தங்களுக்கு தெரியாது என்றும், அனுமதி பெறாமல் சென்றுவிட்டனர். என்றும் கூறுவது தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற செயலாகும். வனத்துறை சார்பில் கேட்டுகள் அமைக்கப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தங்களுக்கு தெரியாது என கூறுவது நம்பும் படியாக இல்லை.

பகல் 12 மணியளவில் தீ பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் மீட்புப் பணிகள் மாலைதான் தொடங்கினர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு இருந்தால் பெரும்பாதிப்பு ஏற்படாத வகையில் மாணவிகளையும், பொதுமக்களையும் மீட்டு இருக்க முடியும் என்று உள்ளுர் மக்கள் கூறுவது கவனிக்கத்தக்கது. பொறுப்பற்ற நிர்வாகத்தால் மனித உயிர்கள் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.

மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிப்பதுடன், மீட்கப்பட்டவர்களைத் தவிர எஞ்சியவர்களின் நிலை என்னானது என்பது தெரியாத நிலையில், பலரது உடல் சிதறிகிடப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.

அனைவரும் மீட்கப்படுவதுடன், உயரிய சிகிச்சையளித்து, அனைவரையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுபோன்ற துயர சம்பங்கள் இனி நடைபெறாது இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x