Last Updated : 31 May, 2019 12:00 AM

 

Published : 31 May 2019 12:00 AM
Last Updated : 31 May 2019 12:00 AM

மக்களின் தாகம் தீர்க்க ஆட்டோவில் வாட்டர் கேன்: புதுக்கோட்டையில் அசத்தும் அன்வர்

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் எ.அன்வர். இவர், கடந்த 20 ஆண்டுகளாக பயணிகள் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது ஆட்டோவில் குடிநீர் கேனை எடுத்துச் செல்லும் இவர் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் தாகத்தை மட்டுமின்றி, தான் செல்லும் வழியெங்கும் மக்களின் தேவை அறிந்து அவர்களின் தாகத்தையும் தீர்த்து வருகிறார். பிறரின் தாகம் தீர்க்கும் இவரது சேவையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

இதுகுறித்து அன்வர் கூறியது: ஆட்டோவில் பய ணம் செய்யும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டோர் மட்டுமின்றி மற்றவர்களும் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததைப் பார்த்துள்ளேன். பலர், ஆட்டோவில் மயக்கம் அடைந்ததும் உண்டு. உரிய இடத்துக்குச் செல்வதற்குள் குழந்தைகளும் தாகத்தில் பரிதவிப் பதைப் பார்த்து இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். பயணிகள் மட்டுமின்றி நான் செல்லும் வழியில் சந்திக்கும் பலரும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்ததைப் பார்த்தேன். சிலர், தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டு, நான் குடிப்பதற்காக வைத்திருந்த பாட் டில் தண்ணீரைக் கொடுத்ததும் உண்டு.

இதையடுத்தே, ஆட்டோவில் வாட்டர் கேன் வைப்பதற்கு ஏற்றபடி ஸ்டாண்ட் ஒன்றை அமைத்து 25 லிட்டர் வாட்டர் கேனை அதில் வைத்து எடுத்துக்கொண்டு பயணிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறேன். தினமும் 2 கேன் தண்ணீர் விநியோகிக்கிறேன். இதனால் எனக்கு ஒரு நாளைக்கு ரூ.60 செலவாகிறது.

என் ஆட்டோவில் எப்போதும் வாட்டர் கேன் இருக்கும் என்று நன்கு தெரிந்த பலரும் ஆட்டோ ஸ்டாண்டில் வந்து என்னிடம் கேட்டு தண்ணீர் வாங்கி குடிப்பார்கள். வெயில் நேரங்களில் சாலையில் வயதானவர்கள் நடந்து செல்வதைப் பார்த்தால், நானே ஆட்டோவை நிறுத்தி, தண்ணீர் கொடுப்பேன்.

ஆட்டோ ஓட்டுவது மூலம் நாளொன்றுக்கு கிடைக்கும் ரூ.500 வருமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியைவிட தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் செயலால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. இந்த சேவையை என்றென்றும் தொடர்வேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x