Published : 24 May 2019 09:26 AM
Last Updated : 24 May 2019 09:26 AM

தமிழகம் சமூக நீதியின் வழியில் பயணிக்கும் என்பதை தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்: தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன்

சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் மட்டும், தொடக்கம் முதலே திருமாவளவன் முன்னிலை, பின்னடைவு என்று மாறிமாறி வந்தது. இதனால், சிறிது பரபரப்பு நிலவியது. இறுதியாக திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த வெற்றி தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை சிதம்பரம் தொகுதி மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி.  எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

சனாதன சக்திகள் என்னை தோற்கடிக்க 100 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள், எனக்கெதிரான அவதூறு பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டார்கள். அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்தவர்களும் மிகக்கடுமையாக உழைத்து இந்த வெற்றியை ஈட்டித்தந்திருகிறார்கள்.

அண்ணன் ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், வாக்களித்த யாவருக்கும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றி அறத்திற்கு கிடைத்த வெற்றி, மக்களுடைய வெற்றி. ஏற்கனவே நாங்கள் அறிவித்ததை போல சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமளவு வெற்றிபெற்றாலும் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் எடுபடவில்லை. தமிழக மக்கள் வழங்கியிருக்கிற இந்த தீர்ப்பு தமிழ்மண்ணில் சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் இடமில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய தேசமே ஒரு திசைவழியில் பயணித்தாலும் தமிழகம் எப்போதும் சமூக நீதியின் வழியில் அறத்தின் வழியில் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x