Published : 23 May 2019 06:06 PM
Last Updated : 23 May 2019 06:06 PM

ஏமாற்றத்தில் தினகரன்; ஏற்றத்தில் கமல், சீமான்- வாக்கு விவரங்கள் என்ன சொல்கின்றன?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அமமுக, திராவிடக் கட்சிகளின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தனர். குறிப்பாக தினகரனின் வசீகரத் தலைமை, பணபலம் மற்றும் அதிமுக தலைமை மீதான அதிருப்தி ஆகியவற்றால், அமமுக கணிசமான எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

அதே நேரத்தில் கடந்த தேர்தல்களில் சில ஆயிரங்களில் வாக்குகளைப் பெற்று வந்த சீமான், இம்முறை சற்றே அதிகமாகப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே மக்களவைத் தேர்தலைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எப்படிப்பட்ட ஆதரவு கிடைக்கும் என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுந்தது. இந்த ஆரூடங்கள் அனைத்துக்கும் தமிழக மக்கள், வாக்குகளின் வாயிலாக விடையைச் சொல்லி இருக்கின்றனர்.

பிற்பகல் 4 மணி நிலவரப்படி,

மத்திய சென்னையில் அமமுக 3.08% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி 3.73% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே வேளையில் கமலின் மக்கள் நீதி மய்யம் 11.58% வாக்குகளைப் பெற்றுள்ளது.

வட சென்னையில் மூவருக்குமான போட்டியில் முந்துகிறார் கமல். அவர் கட்சியின் வேட்பாளர் மவுரியா 11.53% வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் 6.97% வாக்குகளோடு 4-ம் இடத்தில் இருக்க, அமமுகவின் சந்தானகிருஷ்ணன் 3.65% வாக்குகளோடு 5-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல தென்சென்னை தொகுதியிலும் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்ததாக கமலின் மநீம, 12.72% வாக்குகளை வாங்கியுள்ளது. அதேபோல நாம் தமிழரின் ஷெரின் 4.36% வாக்குகளோடு இருக்க, அமமுக 2.67 சதவீதத்தில் பின்னுக்குச் சென்றுள்ளது.

கன்னியாகுமரியில் நாம் தமிழர் 1.56% வாக்குகளையே பெற்றுள்ளது. எனினும் அதைவிடக் குறைவாக மநீம 0.77%-ம், அமமுக 1.2% வாக்குகளே மட்டுமே பெற்றுள்ளன.

கரூரில் நாம் தமிழர் கட்சி முந்தியுள்ளது. அக்கட்சியின் கருப்பையா 3.68% வாக்குகளைப் பெற்றுள்ளார். மநீம-க்கு 1.69% வாக்குகளும், அமமுகவுக்கு 2.49% வாக்குகளும் கிடைத்துள்ளன.

கிருஷ்ணகிரியில் 1% வாக்குகளைக் கூட அமமுகவால் பெற முடியவில்லை. நாம் தமிழர் 2.36%-ம், மநீம 1.37%-ம் பெற்றுள்ளன. மதுரையில் 7.39% வாக்குகளைப் பெற்ற அமமுகவைப் பின்னுக்குத் தள்ளி உள்ளது மநீம. அக்கட்சியின் வேட்பாளர் அழகர் 8.5% வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழரின் பாண்டியம்மாள் 4.32% பெற்றுள்ளார்.

நாமக்கல்லில் நாம் தமிழர் 3.45%-ம் மநீம 2.8%-ம் பெற்றுள்ள நிலையில் அமமுக 2.05% வாக்குகளையே தக்கவைத்துள்ளது. நீலகிரியில் நாம் தமிழர் வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடியான நிலையில், மநீம 4.07%-ம், அமமுக 4%-ம் வாங்கியுள்ளன.

பெரம்பலூரில் மநீம வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் 4.88%-ம், அமமுக 4.13%-ம் பெற்றுள்ளன. பொள்ளாச்சியில் மநீம 5.58% வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் 2.92 மற்றும் அமமுக 2.43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேபோல சேலத்திலும் அமமுக, நாம் தமிழரைப் பின்னுக்குத் தள்ளி மநீம அதிக வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் கணிசமான வாக்கு வங்கியை கமல் கைப்பற்றியுள்ளார். அவரின் மக்கள் நீதி மய்யம் 9.16% வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் 6.31% மற்றும் அமமுக 3.27% பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் மநீம போட்டியிடாத நிலையில், நாம் தமிழர் 5.05% வாக்குகளும் அமமுக 4.5% வாக்குகளும் பெற்றுள்ளன.

தஞ்சாவூரில் நாம் தமிழர் முந்தியுள்ளது. அக்கட்சி 5.44% வாக்குகளைப் பெற்ற நிலையில், மநீம 2.28 சதவீதமும் அமமுக 2.52 சதவீதமும் பெற்றுள்ளன. திருவள்ளூரில் மநீமவும் நாம் தமிழரும் தலா 4.71, 4.34 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால் அமமுகவோ வெறும் 2.63% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

கொங்கு மண்டலத்தில் என்ன நிலை?

கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் 12.2% பெற்றுள்ளார். இது பாஜக வேட்பாளரின் வெற்றியைப் பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 4.97% வாக்குகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் அமமுக வெறும் 3.08% வாக்குகளையே கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் கமலே ரேசில் முந்துகிறார். அவரின் மநீம 4.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. சீமான் 3.66%-ம், டிடிவி 2.44%-ம் பெறுகின்றனர். அதேபோல திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார் 5.6% வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் 3.72%-மும் அமமுக 3.88%-மும் பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் அமமுக வேட்பாளரால் ஓரிலக்க வாக்குகளைக் கூடப் பெற முடியவில்லை. அமமுக வேட்பாளர் தமிழ்மாறன் 0.52% வாக்குகளும் நாம் தமிழர் 2.75%-மும் மநீம 4.73%-மும் பெற்றுள்ளனர்.

*

புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மூலம் அமமுக பொதுச் செயலாளரான தினகரனின் வாக்கு வங்கி, கமல் மற்றும் சீமானின் வாக்கு வங்கியை விடக் குறைவாக இருப்பது தெரியவருகிறது. மேலே குறிப்பிட்ட தொகுதிகளைத் தவிர்த்து சில இடங்களில் மட்டுமே அமமுக மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்தத் தரவுகளின் மூலம் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுகவைத் தோற்கடித்து எம்எல்ஏவாக சட்டப்பேரவை சென்ற டிடிவி தினகரன் மீதான எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

கமல்ஹாசனுக்கு கணிசமான ஆதரவு உருவாகி இருப்பதையும் காண முடியும். அதே நேரத்தில் சீமானின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களைக் காட்டிலும் குறிப்பிட்ட அளவு அதிகரித்திருப்பதையும் உணர முடிகிறது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x