

22 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் என, அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட அமமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் நேற்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.
தேனி சிறையில் உள்ள செல்வத்தை சந்திக்க அமமுக செய்தித்தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இருந்து இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"திட்டமிட்டு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. அதில் செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை ஜாமீனில் வெளியே எடுத்து இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம். அமமுக, திமுகவின் 'பி' டீம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அப்படி நாங்கள் 'பி' டீம் என்றால், நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து நிற்கப் போகிறோம். திமுகவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் நின்றிருக்க மாட்டோமா?
நடக்கும் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர 35 எம்எல்ஏக்கள் தேவை. இந்தத் தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம்.!" என்றார்.
ஆட்சியமைக்க திமுகவுக்கு ஆதரவு கொடுப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "இல்லை.!" என பதிலளித்தார் தங்க தமிழ்ச்செல்வன்.