40 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்: விபத்தில் கை உடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி புகாரில் காவல் ஆணையர் நடவடிக்கை

40 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்: விபத்தில் கை உடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி புகாரில் காவல் ஆணையர் நடவடிக்கை
Updated on
2 min read

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மாநகரப் பேருந்து மோதியதில் கை உடைந்தது. விபத்து குறித்து அலட்சியமாக விசாரித்து 40 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாத போக்குவரத்து உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்தார். விபத்து குறித்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

சென்னை ஷெனாய் நகர் டிபி சத்திரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் அந்தோணி (50).  பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அருகிலுள்ள சர்ச்சில் பக்திப் பாடல் பாடி அதில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையால் பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவரது மனைவி மேரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. வழக்கம்போல் கடந்த கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அந்தோணியின் மனைவி மேரிக்கு உடல் நிலை சரியில்லாததால், அந்தோணி மட்டும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு பாட்டுப் பாடச் சென்றுள்ளார்.

சாலையோரம் நடந்து சென்ற அந்தோணி மீது மாநகரப் பேருந்து ஒன்று மோதியுள்ளது. பின்னர், பேருந்து நிற்காமல் சென்று விட்டது. பேருந்து மோதியதில் அந்தோணியின் வலது கை முறிந்தது. அதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரின் வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனால் பல நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நிலைக்கு அந்தோணி தள்ளப்பட்டார். இந்த விபத்து நடந்த போது, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை நடத்தியுள்ளார். அந்தோணியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு சரி, அதன்பின்னர் பேருந்தைக் கண்டுபிடிக்கவோ, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவோ சிறு துரும்பையும் அசைக்கவில்லை.

விபத்து நடந்து சிகிச்சைக்குப் பின் பலநாள் அந்தோணி ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து வழக்கு குறித்து உதவி ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் இதோ அதோ என அலட்சியமாக பதில் வந்ததே தவிர ஒரு நடவடிக்கையும் இல்லை.

வாகனம் என்னவென்று தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளனர். எங்களுக்கு எப்.ஐ.ஆர் காப்பி கொடுத்தால் இன்சூரன்ஸ் போட வசதியாக இருக்கும் என்று கேட்டும் கண்டுகொள்ளவில்லை. 40 நாட்களாகியும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அந்தோணி வீங்கிய கையுடன், கிழிந்த சட்டையுடன் அழுதபடி தனது சகோதரியுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து நேற்று புகார் அளித்தார்.

புகார் பெறப்பட்டு போக்குவரத்து துணை ஆணையர் (மேற்கு) மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. இந்த விவரம் காவல் ஆணையர் கவனத்திற்கு வந்ததை அடுத்து விபத்து நடந்து 40 நாட்களாக  விசாரணையும் நடத்தாமல், வழக்குப் பதிவும் செய்யாமல் அலட்சியமாக இருந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் மோகனைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். விபத்து குறித்தும் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் உடனடியாக எப்.ஐ.ஆர் போடப்பட்டது.

பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி காவல் ஆணையரிடம் புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in