Published : 05 May 2019 02:51 PM
Last Updated : 05 May 2019 02:51 PM

பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான சர்ச்சை ஆடியோ விவகாரம்; 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பொன்னமராவதியில் ஒரு சமூகம் பற்றி பேசி சர்ச்சை ஆடியோ விவகாரத்தில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறாகவும், இருவர் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஏப்.19-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆடியோ சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தவிவகாரம் தொடர்பாக சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை அண்மையில் போலீஸார் கைது செய்தனர்.

இவர் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஆடியோவில் அவதூறாக பேசிய இருவரில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே உள்ள நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்ற எம்.சத்தியராஜ், ஆடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுமாறு ஆலோசனை கூறிய பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் பகுதியைச் சேர்ந்த வசந்த், ஆடியோவை பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சபரி(18), சீகன்காடு பகுதியைச் சேர்ந்த எஸ்.பாலாஜி(19), புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள மோசகுடியைச் சேர்ந்த ரெங்கையா மற்றும் ஒரு இளைஞர் என 7 பேரை  போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஆடியோவில் பேசிய இருவரில் மற்றொருவரான புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன்(32) என்பவரை போலீஸார் ஏப்ரல் 30-ம் தேதி கைது செய்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  இழிவாகப் பேசியவர்களைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும், கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவிட்ட சிங்கப்பூரில் பணிபுரிந்துவந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த மாதவன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் செல்வகுமார், வசந்த், சத்தியராஜ், ரெங்கையா ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எஸ்.பி. பரிந்துரையின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x