

தேனியில் இரவோடு இரவாக வாக்குப்பெட்டிகள் வந்திறங்கியதன் பின்னணியில் ஓபிஎஸ் சதி உள்ளதாக தேனி திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனியில் செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக வந்திறங்கிய வாக்குப்பெட்டிகள் சர்ச்சை இன்னும் பிற அரசியல் கட்சிகள் மத்தியில் அடங்கவில்லை. இது தொடர்பாக தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவைச் சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ், "இத்தனை வாக்குப்பெட்டிகளை கோவையில் இருந்து இங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? அண்மையில் துணை முதல்வர் ஓபிஎஸ் வாரணாசி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து வந்தார். அங்கு அவர் கை, காலில் விழுந்து இந்த யோசனைக்கு அனுமதி வாங்கி வந்துள்ளார். வாக்குப்பெட்டியை மாற்றவே இந்த சதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கு ஒத்துப்போகக் கூடாது. மேலும் இங்கு மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இரவில் கொண்டுவரப்பட்ட 50 வாக்குப் பெட்டிகளையும் உடனே திரும்பக் கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
நேற்றிரவு நடந்தது என்ன?
முன்னதாக, நேற்றிரவு தேனி தாலுக்கா அலுவலகத்துக்கு புதிதாக 50 வாக்குப்பெட்டிகள் வந்திறங்கின. இது குறித்த தகவல் மற்ற கட்சியினருக்குப் பரவ அந்தப் பகுதி பரபரப்பானது.
உடனே அங்கு குவிந்த எதிர்க்கட்சிக்காரர்கள் வாக்குப்பெட்டியை மாற்றப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி தாலுக்கா அலுவலரிடம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி வந்தார். எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, "பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை ஓர் இடத்தில் இருந்து, தேவைப்படும் இடங்களுக்கு மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறைதான். தேவை கருதியே அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மற்றும் ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து தேனிக்கும், 20 விவிபாட் இயந்திரங்கள் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளன" என்றார்.
இந்நிலையில் தான் இன்று காலை தேனி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்ப எடுத்துச் செல்ல உத்தரவிடுமாறு கூறி மனு அளித்துள்ளார்.
தேனியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் அகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டி தேனி கொடுவிளார்பட்டியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.