Published : 03 May 2019 08:09 PM
Last Updated : 03 May 2019 08:09 PM

என்னடா வாழ்க்கை இது; பணமில்லாவிட்டால் பிணம்- வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு தற்கொலை செய்த இளைஞர்

''என்னடா வாழ்க்கை இது. பணம் இருந்தால்தான் மனிதனாகவே மதிக்கிறார்கள்'' என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு சில மாதத்தில் மணக்கோலம் காண வேண்டிய இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள  பரசுராமன் 5- வது தெருவைச் சேர்ந்தவர்  அன்சர் பாஷா (55). இவரது மகன் மன்சூர் (25). இவர் மாடன் லைன் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மன்சூருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து  திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது.இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மன்சூர், பணம் இருந்தால் தான் மனிதனுக்கு மதிப்பு, இல்லாவிட்டால் பிணம் என்று விரக்தியில் பேசியுள்ளார். ஏதோ கவலையில் பேசுகிறார் என நண்பர்கள் சாதாரணமாகப் பேசி கலைந்துள்ளனர்.

வீட்டுக்கு வந்த அவர் தனியறையில் படுத்து உறங்கினார். நேற்று காலையில் கதவைத் திறக்கவில்லை. பெற்றோர், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவரது தாயின் சேலையில் தூக்கிட்ட நிலையில் மன்சூர் பிணமாகத் தொங்கியது தெரியவந்தது.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அவரது உடல் அடக்கம் நடந்தது.

என்ன காரணத்திற்காக மன்சூர் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியாத நிலையில் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நண்பர்களின் வாட்ஸ் அப்பில் ஷேர் ஆனது. அதில் அவர் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது வாட்ஸ் அப்பில், ''என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் நம்மல மதிக்கமாட்டாங்க… இந்த வாழ்க்கைக்கு குட் பை… டியர் ஆல் லவ் யூ ஸோ மச்’’ என்ற வாசகங்கள் இருந்தன.இதைப் பார்த்த நண்பர்கள் துயரமடைந்தனர்.

வாழ்க்கைக்குப் பணம் தேவைதான். ஆனால் பணத்தை வைத்து மட்டும் வாழ்வதல்ல வாழ்க்கை என்பதைப் புரியாமல் மன்சூர் வாழ்க்கையை முடித்துக்கொண்டாரே என அவரது உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x