Published : 07 May 2019 02:54 PM
Last Updated : 07 May 2019 02:54 PM

சந்திரசேகர் ராவை ஸ்டாலின் சந்திக்காதது வரவேற்புக்குரியது: திருமாவளவன் பேட்டி

சந்திரசேகர் ராவை ஸ்டாலின் சந்திக்காதது வரவேற்புக்குரியது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார். அதில், செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியம் இருக்கிறதா?

தற்போதைய சூழலில் காங்கிரஸ் போதிய பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, 3-வது அணி குறித்த பேச்சு தேவையற்றது என கருதுகிறேன்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. தற்போதைய நிலையில் அந்தச் சந்திப்பை திமுக தவிர்த்திருப்பதாகவும் தெரியவருகிறது. திமுக எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். ராகுல் பிரதமராவார் என இந்தியாவிலேயே முதன்முதலாக அறிவிப்பு செய்த கட்சி திமுக. அதில் திமுக உறுதியாக இருக்கிறது என நம்புகிறேன். அதுதான் நீடிக்க வேண்டும், அப்போதுதான் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முடியும்.

இரண்டு கட்டத்திற்கு இன்னும் தேர்தல் நடக்காத போது, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தால், அது அந்தத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருக்கிறது.

திமுக, அதிமுகதான் கூட்டணியை முடிவு செய்யும் இடத்தில் இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தீர்கள். எதன் அடிப்படையில் அதனைக் கூறினீர்கள்?

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற இடத்தில் இருந்து முடிவுகளை எடுக்கின்றன. ஆகவே, இன்றைக்கு நான் ஒரு அணியில் இருக்கிறேன் என்பது என்னுடைய விருப்பமாகத்தான் இருக்குமே தவிர, வருங்காலத்தில் அதுவே உறுதியான முடிவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறோம், இருக்க விரும்புகிறோம், ஆனால், அதனை நானே பிரகடனப்படுத்துவது பொருத்தமானது இல்லை.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x