நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு: தலைமைச் செயலாளர் ஆலோசனை

நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு: தலைமைச் செயலாளர் ஆலோசனை
Updated on
1 min read

நீர்நிலைகள் மற்றும் நீர் வழிகளைப் பாதுகாப்பதற்கு சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்தில் ஒரு வழக்கில் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பருவமழைக் காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்குத் திருப்பி விட திட்டம் வகுக்க குழு அமைக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை அளித்தது.

எம்.பி., எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தது. மேலும், நீர் நிலைகள், நீர்வழித் தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்யவும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீர்நிலை மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாதம் ஒரு முறை, தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும், போலீஸ் உதவியுடன் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து முறையான உதவி வரவில்லை என்றால், ராணுவத்தினரின் உதவியை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைச் செயல்படுத்தவும், குழு அமைப்பது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நீர்வழித்தடங்கள் நிலை, அவற்றைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, நடைமுறைச் சிக்கல், குழு அமைக்கப்பட்டால் அதில் எந்தத் துறை அதிகாரிகளை இணைப்பது என்பது குறித்து பிரிவு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விரைவில் சிறப்புக் குழு அமைக்கும் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in