தேனி தொகுதியில் பணம் சுனாமியாகக் கொட்டியது; ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

தேனி தொகுதியில் பணம் சுனாமியாகக் கொட்டியது; ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
Updated on
1 min read

தேனி ம்க்களவைத் தொகுதியில் பணம் சுனாமியாகக் கொட்டியது. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:

''தேனி தொகுதியில் தேர்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றன. அதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. பணபலத்தால் உருவாக்கப்பட்டதே எனது தோல்வி. தன் மகன் ரவீந்திரநாத் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வாரணாசி சென்று ஓபிஎஸ் மோடியைச் சந்தித்தார்.

தேனி தொகுதியில் தேர்தலின் போது தில்லுமுல்லுகள் நடந்தன. பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் இல்லை. . பணம் மழையாகப் பொழியவில்லை. சுனாமியாகக் கொட்டியது. தேனியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன். ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை மீண்டும் எண்ண வேண்டும்

ஓபிஎஸ் மீது மோடிக்கு அவ்வளவு அக்கறை ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் மீது இல்லாத அக்கறை ஓபிஎஸ் மகன் மீது மோடிக்கு இருக்கிறது.

காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குக் காரணம் தமிழகத்தில் அமைந்தது போன்ற கூட்டணி பல மாநிலங்களில் அமையவில்லை என்பதால்தான். ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். மற்ற மாநிலங்களில் அப்படி அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் ஒன்றிணையவில்லை. இதுவே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம்.

தமிழகம், கேரளா மாநில மக்களைப் போல வட இந்திய மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை. மோடியின் பிரச்சாரத்தில் அவர் மயங்கிப் போய் உள்ளனர். விரைவில அவர்கள் தெளிவு பெறுவார்கள்.

தமிழகத்துக்காக திமுகவின் எம்.பி.க்களும், காங்கிரஸைச் சார்ந்த எம்.பி.க்களும் குரல் கொடுப்பார்கள்''.

இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in