Published : 14 May 2019 01:43 PM
Last Updated : 14 May 2019 01:43 PM

சர்ச்சைப் பேச்சு எதிரொலி: கமல் வீடு, அலுவலகத்துக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே எனும் இந்துதான் என கமல் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோட்சே எனும் ஒரு இந்து என காந்தியை சுட்டுக்கொன்ற சம்பவத்தை அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டுப் பேசினார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கமல் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம்தான் என கமல் பேசியதாகவும்,  சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் இதுபோன்று பேசியதாக இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

கமல் பேசியதில் தவறேதும் இல்லை என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வன்முறையைத் தூண்டும் விதத்தில் ஒரு அமைச்சர் இவ்வாறு பேசியது சரியா என கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. கமலின் பேச்சு சர்ச்சை ஆனதை அடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது வீட்டை இந்து அமைப்புகள் முற்றுகையிடலாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படலாம் என்கிற காரணத்தால் அதைத் தவிர்க்க ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் கமல் தற்போது நீலகிரியில் ஓய்வெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x