உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: நீதி வென்றது; அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: நீதி வென்றது; அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

தர்மம் வென்றது, நீதி வென்றது என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது என, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கட்சி விரோதச் செயலில் ஈடுபட்டதாக கடந்த வாரம் கொறடா ராஜேந்திரனால் பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவைத் தலைவருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீமானம் கொண்டு வந்தது. இந்நிலையில், தங்கள் மீது சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கவேண்டும் என ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு சார்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுமுன் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று (திங்கள்கிழமை) விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு குறித்து, எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர்.

முதலில் பேசிய ரத்தினசபாபதி, "தர்மம் வென்றது, நீதி வென்றது என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இனி, நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க அவசியம் இருக்காது என்றுதான் கருதுகிறேன். இருப்பினும் சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

எம்எல்ஏ பிரபு தமிழ்நாட்டில் தான் இருக்கிறார். அவருக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்

அதிமுகவின் மற்ற எம்எல்ஏக்கள் தனியாக எங்களைக் காணும்போது கட்சியையும் ஆட்சியையும் அடகு வைத்துவிட்டதாக சங்கடப்படுகிறார்கள். ஆனால், எங்களைப் போன்று அவர்களும் வந்திருந்தால், அந்த நிலைமை சரிசெய்யப்பட்டிருக்கும். வெளியே வந்து சொன்னால், தகுதியிழப்பு வந்துவிடுமோ என அவர்கள் பயந்திருக்கலாம்" என ரத்தினசபாபதி தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய கலைச்செல்வன், "ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். யாரின் தயவும் இன்றி ஜெயலலிதாவால் நேரிடையாக சட்டப்பேரவை உறுப்பினர்களானவர்கள் நாங்கள். 2016 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலில், ஜெயலலிதா என்னை தான் வேட்பாளராக அறிவித்தார்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in