Last Updated : 27 May, 2019 07:24 AM

 

Published : 27 May 2019 07:24 AM
Last Updated : 27 May 2019 07:24 AM

வட இந்திய மனப்பான்மையில் இருந்து பாஜக வெளியே வரவேண்டும்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் கருத்து

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வட இந்திய மனப்பான்மையில் இருந்து வெளியே வந்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன் தெரிவித்தார்.

மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்களில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நேற்று அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

மோடி மீண்டும் தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைப்பார் என்று எதிர்பார்த்தீர்களா?

ஆம். அது ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். 1952-ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். முன்னாள் பிரதமர்கள் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, மேற்குவங்க முன்னாள் முதல்வர்கள் பி.சி.ராய், ஜோதிபாசு ஆகியோருடன் பணியாற்றி உள்ளேன். டெல்லியில் பல ஆண்டுகள் உயர் பொறுப்பில் இருந்ததால் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களின் செயல்பாடுகளை நேரில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றவன். தவிர, குஜராத் முதல்வராக, பிரதமராக மோடியின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். அந்த அனுபவத்தில், மோடி தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் வெல்வார் என எதிர்பார்த்தேன். அதை வெளிப்படையாக பேசவும் செய்தேன்.

மோடியின் இந்த அபார வெற்றிக்கு என்ன காரணம்?

இந்திய மக்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக பாமர மக்கள் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நான் சொல்லும் ஆன்மிகத்துக்கும், மதத்துக்கும் தொடர்பு இல்லை. கடந்த பல ஆண்டுகளாக நம் நாட்டு மக்கள் தங்கள் ஆன்மிக உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். ‘நான் ஓர் இந்து’ என்று சொல்லவே பயந்தனர். கோயிலுக்கு போனால் கேலி பேசுவார்களோ என்று அச்சப்பட்டனர். மோடி பிரதமர் ஆனதும், இந்த தவிப்பு, அச்சத்தில் இருந்து விடுதலை பெற்றதாக மக்கள் கருதுகிறார்கள். மோடியை ஒரு தலைவராக மட்டுமின்றி, தங்களது ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் குவியலாக பார்க்கின்றனர். அதனால்தான் கடந்த 2014-ல் பெற்றதைவிட பாஜகவால் 31 இடங்கள் அதிகம் பெற முடிந்தது.

கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சி பற்றி..

மோடி பிரதமர் ஆனதும் தனது முதல் சுதந்திரதின உரையில், கழிவறை இல்லாமல் கிராம மக்கள், பெண்கள் படும் சிரமங்கள் பற்றி பேசினார். பேச்சோடு நிற்காமல், ‘தூய்மை இந்தியா’ திட்டம் மூலம் சுமார் 10 கோடி கழிவறைகள் கட்டி முடித்துள்ளார். இது மக்களின் உணர்வோடு சம்பந்தப்பட்ட விஷயம். இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டமும் மக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்றவற்றையும் தாண்டி மோடியால் வெல்ல முடிந்தது. நாட்டின் பாதுகாப்பு, உலக நாடுகளுடன் நல்லுறவு உள்ளிட்ட விஷயங்களிலும் மோடி அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளும் அதையே வெளிப்படுத்தியுள்ளன.

நாடு முழுவதும் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லையே?

இத்தேர்தலில் தமிழகத்திலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். அதற்கான சூழலும் இருந்தது. ஆனால், அதை வீணடித்துவிட்டனர். தமிழகம் பற்றியும், இங்கு பாஜகவை வளர்ப்பது பற்றியும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இன்னும் அக்கறை காட்டியிருக்க வேண்டும். அவர்கள் நடந்துகொண்ட விதம், பாஜகவை ஒரு வட இந்திய அடிப்படையிலான கட்சியாகவே அவர்கள் பார்க்கிறார்களோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, எல்லா திட்டங்களுக்கும் இந்தி பெயரையே வைத்தால், அதன் முக்கியத்துவம் தமிழர்களுக்கு எப்படி புரியும். இதனால், பாஜக ஏதோ அந்நியப்பட்ட கட்சியாகவே தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ளது. தங்களுக்கு நெருக்கமான ஒரு கட்சியாக பாஜகவை அவர்கள் கருதவில்லை. உலகமே வியக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்ற மோடியால், தமிழகத்தில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்ற முடியாமல் போனது இதனால்தான்.

மோடி மீதான எதிர்ப்பு அலையால் தான் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததா?

‘தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ளது. மோடியை மக்கள் வெறுக்கின்றனர்’ என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. தமிழக மக்களின் எண்ணத்திலேயே பாஜக இல்லை. இருந்தால்தானே வெறுப்பது. பாஜக தலைவர்களால் தமிழக மக்களை ஈர்க்க முடியவில்லை. காலை 10 மணிக்கு விமானத்தில் வந்திறங்கி, நட்சத்திர ஹோட்டலில் தங்கி, ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு, மாலையில் விமானத்தில் டெல்லிக்கு பறந்துவிடுகிறார்கள். இப்படி செய்தால், மக்கள் மனதில் உள்ளதை எப்படி தெரிந்துகொள்ள முடியும். ஊழல் இல்லாத ஆட்சி என்று பேசிவிட்டு, தமிழகத்தில் ஊழல் கட்சியுடனேயே கூட்டணி வைக்கின்றனர். இப்படி செய்தால் மக்கள் எப்படி பாஜகவை ஏற்பார்கள்.

தமிழகத்தில் பாஜக தனித்து வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?

நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. இப்போது இருக்கும் கட்சிகளி லேயே தேசிய சிந்தனையும், நாட்டின் வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட கட்சி பாஜகதான் என்று நம்புகிறேன். தேசியக் கட்சியான காங்கிரஸ் சாதாரண ஒரு அரசியல் கட்சியாக மாறிவிட்டது. எனவேதான், தமிழகத்திலும் பாஜக வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டியது அவசியம். அப்படி செய்தால், தனித்து போட்டியிட்டு பாஜகவால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

மதவாதக் கட்சி என்று விமர்சிக்கப் படும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்பார்களா?

ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கட்சி என்ற விமர்சனம் பாஜக மீது இருக்கிறது. எனது பணிக் காலத்தில் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளை நேரில் அறியும் வாய்ப்பு பெற்றவன். அந்த அமைப்பு தனது தொண்டர்களுக்கு தேசத்தின் மீது பக்தியையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கிறது. பாஜக இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதுவும் முக்கிய காரணம். தவிர, நாட்டிலேயே வலுவான கட்சியாக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியாக இருப்பதால் பாஜகவால் தமிழகத்துக்கு பல நன்மைகளை செய்ய முடியும். இது தமிழக மக்களுக்கும் தெரியும். எனவே, பாஜகவை கட்டாயம் ஏற்பார்கள்.

தமிழகத்தில் வளர பாஜக என்ன செய்ய வேண்டும்?

தமிழக பாஜகவில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து மாநில தலைமைப் பொறுப்பையும், மேலிடத் தலையீடு இல்லாத முழு சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தால் கண்டிப்பாக தமிழகத்தில் பாஜக வளரும். தவிர, இந்தி, வட இந்திய மனப்பான்மையில் இருந்து மேலிடத் தலைவர்கள் விடுபட வேண்டும். மோடியும், அமித்ஷாவும் தமிழகத்தின் சிறு நகரங்களுக்கும் நேரில் வந்து மக்களிடம் உரையாட வேண்டும். அப்போது தமிழக மக்களின் மனங்களை கட்டாயம் வெல்லலாம்.

இவ்வாறு பி.எஸ்.ராகவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x