நிறம், சாதி, இனம் பார்க்காமல் சேவை செய்வீர்கள் என நம்புகிறேன்: மோடிக்கு குஷ்பு வாழ்த்து

நிறம், சாதி, இனம் பார்க்காமல் சேவை செய்வீர்கள் என நம்புகிறேன்: மோடிக்கு குஷ்பு வாழ்த்து
Updated on
1 min read

நிறம், சாதி, இனம் பார்க்காமல் சேவை செய்வீர்கள் என நம்புகிறேன் என பிரதமராக பதிவேற்கவுள்ள மோடிக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்திய அளவில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைத் தாண்டி, காங்கிரஸ் கட்சி வேறு எந்த மாநிலங்களிலும் முழுமையாக வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா என்பது முழுமையான வெற்றி நிலவரங்கள் வெளியானவுடன் தான் தெரியவரும்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மோடி மீண்டும் பிரதமராக பதவியில் அமரவுள்ளது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள். நரேந்திர மோடிஜி, தேசத்துக்கு சேவை செய்ய மக்கள் உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நிறம், சாதி, இனம் என எதையும் பார்க்காமல் இந்த தேசத்துக்கு நீங்கள் சேவை செய்வீர்கள் என நம்பி, வாழ்த்துகிறேன். தேசத்தை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக பெருவாரியாக முன்னிலை பெற்றுள்ளது குறித்து குஷ்பு, “மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள். தலைவராக அவரது மதிப்பை நிரூபித்துவிட்டார். தனது தந்தையின் நிழலிலிருந்து வெளியே வந்து உலகுக்கு தனது வலிமையை காட்டியுள்ளார். கண்டிப்பாக அவர் விடாமுயற்சி கொண்டவர். வாழ்த்துக்கள் சார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in