வானகரத்தில் துயரம்; சறுக்கி விழுந்த இருசக்கர வாகனம்: தாயின் கண்ணெதிரில் 5 வயது மகன் லாரி மோதி பலி

வானகரத்தில் துயரம்; சறுக்கி விழுந்த இருசக்கர வாகனம்: தாயின் கண்ணெதிரில் 5 வயது மகன் லாரி மோதி பலி
Updated on
1 min read

மதுரவாயல், வானகரத்தில்  தாயுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 வயது சிறுவன், சாலையோரம் மண்ணில் சிக்கி இருசக்கரவ வாகனம் கீழே விழுந்ததால் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருவேற்காடு செல்லியம்மன் நகரில் வசிப்பவர் குமரேசன் (30). மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி  கீதா(27). இவர்களுக்கு தர்ஷன்(5) என்ற மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 விடுமுறை தினம் என்பதால் நெற்குன்றத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு  செல்ல முடிவெடுத்த கீதா இன்று காலை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்.

தாயுடன் மகிழ்ச்சியுடன் குழந்தைகள் அமர்ந்துச் செல்ல சாலையோரம் மெதுவாக கீதாவின் மொபெட் சென்றுக்கொண்டிருந்தது. வானகரம் பள்ளிக்குப்பம் அருகே சென்ற போது சாலையோரத்தில் மண் தேங்கிக்கிடந்தது.

இதில் மண்ணில் மொபட்டின் சக்கரம் சறுக்கியதில் மொபெட்டில் இருந்து மூன்றுபேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் மொபெட்டின் வலதுபுறம் சாலையில் சிறுவன் தர்ஷன் விழுந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வேகமாக வந்துக்கொண்டிருந்த லாரி சிறுவன் மீது ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே தாயின் கண்ணெதிரில் தர்ஷன் உடல் நசுங்கி பலியானார். லாரி ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் திடீரென வாகனத்திலிருந்து சிறுவன் விழுந்ததால் லாரி சிறுவன்மீது மோதியுள்ளது. இடதுபுறம் விழுந்ததால் கீதாவும் அவரது மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்தில் கண்ணெதிரே மகன் உயிரிழந்ததைப் பார்த்த தாய் கீதா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேற்றினர். விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு  போலீஸார் சிறுவனின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ஜெய்சிங் என்பவரை கைது செய்தனர். சாலையோரத்தில் தேங்கி கிடங்கும் மண் குவியல் வாகன ஓட்டிகளை சறுக்கி விடுகிறது, இதை மாநகராட்சியினர் உரிய நேரத்தில் அகற்றி இருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in