Published : 08 May 2019 11:57 AM
Last Updated : 08 May 2019 11:57 AM

23-ம் தேதிக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வர் கனவு காண முடியாது: முதல்வர் பழனிசாமி பேட்டி

வரும் 23 ஆம் தேதிக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வர் கனவு காண முடியாது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தூத்துக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் என, அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளாரே?

திமுகவும் அமமுகவும் மறைமுகமாக உறவு வைத்திருக்கின்றனர். அதன் மூலமாக அதிமுக ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளனர் என ஏற்கெனவே நான் பேசி வந்ததை நிரூபிக்கும் விதமாக தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு உள்ளது.

அதிமுக மைனாரிட்டி ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?

மைனாரிட்டி ஆட்சியை நாங்கள் நடத்தவில்லை. திமுக தான் 2006-11 காலகட்டத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்தியது. எங்களிடம் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி தொடரும்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவார் என கூறப்படுகிறதே?

ஸ்டாலின் முதல்வர் கனவு காண்கிறார். அற்ப ஆசையில் இருக்கிறார். ஆனால், மக்கள் அவ்வாறு நினைக்கவில்லை. 23 ஆம் தேதிக்குப் பிறகு அவர் கனவு கூட காண முடியாது.

டெல்லி பல்கலைக்கழகத்தில், தமிழ் மாணவர்கள் டெல்லி மாணவர்களின் உரிமையைப் பறிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளாரே?

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் திறமையானவர்கள். கல்விக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களால் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அகில இந்திய அளவில் பணிகளைப் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். திறமையின் காரணமாகவே அவர்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குச் சாதகமாக செயல்படுவதாக விமர்சனம் உள்ளதே?

தோல்வி பயத்தில் அத்தகைய விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x