Published : 17 May 2019 07:13 AM
Last Updated : 17 May 2019 07:13 AM

59 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறவிருக்கும் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பும் நிறைவு பெறுகிறது

நாடாளுமன்ற மக்களவைக்கு இறுதி கட்டமாக 59 தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை யுடன் ஓய்கிறது. மேற்குவங்கத்தில் மட்டும் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 543 இடங்களுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, 6 கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. 7-வது மற்றும் இறுதி கட்டமாக, பிஹார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்குவங்கம் (9) மற்றும் சண்டிகர் (1) ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட 59 மக்களவை தொகுதிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள்

இறுதிகட்ட தேர்தலில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி (வாரணாசி-உ.பி.), மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார் (சசாராம்-பிஹார்), சிரோமனி அகாலி தளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் (பெரோஸ்பூர்-பஞ்சாப்), இவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் (பதிண்டா-பஞ்சாப்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி (அனந்த்பூர் சாஹிப்), ஜோதிராதித்ய சிந்தியா (குணா-ம.பி.) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அர சியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதுபோல, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 14-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா சாலை வழி தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது, பாஜக மற்றும் திரிண மூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில், வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் உள்ள மேற்குவங்க தத்துவ மேதை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்கூட்டியே முடிக்குமாறு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன்படி, மேற்குவங்கத்தில் மட்டும் நேற்று இரவு 10 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

மற்ற மாநிலங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 4 தொகுதிகள்

தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்கள வைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்தது. அன்றே, தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர் தலும் நடந்தது. இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஏ.கே.போஸ், கனகராஜ் ஆகி யோர் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகள் காலியாக இருந்தன. தகுதிநீக்கம் காரணமாக அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிகளும் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது. இந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஏப்.22-ம் தேதி தொடங்கியது. மே 2-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்த 4 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதன்படி சூலூர்- 22, அரவக்குறிச்சி-63, திருப்பரங்குன்றம்-37, ஓட்டப்பிடாரம்-15 என 137 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். மே 19-ம் தேதி வாக்குப்பதிவு என்பதால், இன்று மாலை 6 மணியுடன் 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் ஓய்கிறது. நேரடியாகவோ, தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவோ பிரச் சாரங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டனர். தற்போது பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச் சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக் குறிச்சியில் வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தை இன்று மாலை நிறைவு செய்கிறார். வரும் மே 19-ம் தேதி இந்த 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

மறுவாக்குப்பதிவு

இதுதவிர, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிகளில்-2, ஈரோடு மாவட்டம் காங்கேயம்-1, கடலூர் மாவட்டம் பண்ருட்டி-1, தர்மபுரியில் பாப்பி ரெட்டிபட்டி-8, திருவள்ளூர் மாவட்டம் பூந்த மல்லியில் -1 என 13 வாக்குச்சாவடிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் 19-ம் தேதி அன்றே மறுவாக்குப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து, 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x